ஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு!

செப்டம்பர் 12, 2019 244

கோவை (12 செப் 2019): நாட்டையும், மக்களையும் குறித்து ஸ்டாலினுக்கு கவலை கிடையாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அமைச்சர்களுடன் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்தப் பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்பது குறித்து மு.க.ஸ்டாலின் முதலில் வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும்.

2006-2011 -ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் ரூ. 26 ஆயிரம் கோடிதான், தமிழகத்துக்கு தொழில் முதலீடாக வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2015 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 2.45 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

இதன்மூலம் ரூ. 53ஆயிரம் கோடி மதிப்பிலான 29 தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன; 57 தொழில் நிறுவனங்கள் விரைவில் துவங்க உள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட உடனே தொழில்களைத் தொடங்கி விட முடியாது. தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். வங்கிகள் மூலம் கடன் பெற்று நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டும்.

பெரிய தொழில்கள் தொடங்க 5 முதல் 6 ஆண்டுகள் வரையும், குறைவான முதலீட்டில் தொழில்கள் துவங்க 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும் என்பதே கள நிலவரம். இவற்றைப் பற்றித் தெரியாமல் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலம் ரூ. 8,835 கோடி தொழில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதற்காக 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவை நிறைவேற்றப்பட்டால் 31,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இஸ்ரேல் நாட்டில் நீராதாரத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து தெரிந்துகொள்ள பயணம் மேற்கொள்ள உள்ளோம். இதனை விமர்சிக்கும் வகையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் உபரிநீரை முறையாகச் சேகரிக்கவில்லை என மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால், திமுக காலத்தில் காவிரி முதல் கொள்ளிடம் வரை எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுக்கிறார். நீர் மேலாண்மைக்காக குழு அமைக்கப்பட்டு உபரி நீர் வெளியேறும் இடங்களைக் கண்டறிந்து ரூ. ஆயிரம் கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டு, தற்போது ரூ. 600 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாகக் கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

2019-20 ஆண்டில் மூன்றாம் கட்டமாக 1, 829 ஏரிகள் பராமரிக்க ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனப் பகுதிகளில் கால்வாய்களைத் தூர்வார ரூ. 66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டையும், மக்களையும் பற்றி கவலைப்படாதவர் மு.க.ஸ்டாலின். வெளிநாடுகளுக்குச் செல்லாமல் முதலீடுகளை ஈர்க்க முடியாது என்ற விஷயத்தை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் மூலம் விபத்துகளைக் கட்டுப்படுத்த முடியும். வெளிநாடுகளில் 10, 12, 16 என வழித்தடங்கள் உள்ளன. இதனால் போக்குவரத்து சீராக உள்ளது. ஆனால், தமிழகத்தில் 8 வழிச்சாலை அமைப்பதற்கே மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ளதுபோல, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த உள்ளோம். தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இல்லை. அவ்வாறு இருந்தால் புதிய தொழில் தொடங்க யாரும் முன்வர மாட்டார்கள்.

தமிழகத்தில் தொழில் தொடங்க நல்ல சூழ்நிலை உள்ளது. சேலம், தலைவாசல் பகுதியில் 900 ஏக்கர் பரப்பளவில் கால்நடை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்க உள்ளோம். இங்கு கால்நடை மருத்துவமனை, ஆய்வகம் அனைத்தும் உயர்தரத்தில் அமைக்கப்படும்.

இங்கு அனைத்து தட்பவெட்ப சூழ்நிலைகளையும் தாங்கக் கூடிய கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம் என்றார். அப்போது, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...