5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு!

செப்டம்பர் 14, 2019 271

சென்னை (14 செப் 2019): தமிழகத்தில் நிகழாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. ஆனால் 5 -ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது.

இந்த நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி:

ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும்.

அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரைப் பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...