10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் அரண்டு போன அப்பா!

செப்டம்பர் 15, 2019 524

கிருஷ்ணகிரி (15 செப் 2019): காதலனுடன் சேர்ந்து, தான் கடத்தப்பட்டதாகவும் 10 லட்ச ரூபாயுடன் வரவும் என்று மகளே அப்பாவுக்கு போன் செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் வித்யா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மர்மநபர் ஒருவர் தன்னை கடத்திவிட்டதாக, தனது சகோதரருக்கு கூறிவிட்டு செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார் வித்யா. சில மணி நேரம் கழித்து, வித்யாவின் தந்தை ஆறுமுகத்தை, இண்டெர்நெட் கால் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், 10 லட்சம் ரூபாய் பணத்தை தான் சொல்லும் இடத்திற்கு வந்து கொடுக்கவில்லை என்றால் வித்யாவை துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் பதறிப்போன வித்யாவின் தந்தை, கிருஷ்ணகிரியில் இருந்து, சென்னை கோயம்பேட்டிற்கு வந்து, இங்குள்ள காவல் நிலையத்தில், தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், வித்யா காரைக்காலில் உள்ள கல்லூரியில் படித்தபோது, என்ஜினீயரிங் மாணவரான மனோஜ் என்பவரை காதலித்ததாகவும், அவர்கள் இருவரும், தற்போது வரை காதலித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இருவருமே நல்ல வேலையில் இருந்தாலும், வேறு வேறு சாதி என்பதால் இவர்களின் காதலுக்கு, வித்யாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து மலேசியாவில் உள்ள மனோஜை தொடர்பு கொண்டு, அங்கு சென்று அங்கிருந்து கனடா சென்று அங்கு செட்டில் ஆகிவிடலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் இதற்கு பணம் அதிகம் செலவாகும் என்பதால் , தனது தந்தையிடம், தன்னை கடத்தி விட்டதாக கூறி பணம் கேட்டு மிரட்டும்படி காதலனுக்கு, திட்டம் வகுத்து கொடுத்துள்ளார் வித்யா. இதையடுத்து கடத்தல் நாடகமாடிய காதலர்களை, கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...