ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை!

செப்டம்பர் 17, 2019 255

சென்னை (17 செப் 2019): இந்தி திணிப்பை தமிழகத்தில் மேற்கொண்டால் ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருந்தால், சர்வதேச அரங்கில் இந்தியா மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்வினை ஆற்றின. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ, சட்டங்களோ இயற்றப்படும் பொழுது, அது மக்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டு

வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல. அது ஜனநாயகத்திற்காக. பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக் கொடுத்து உருவானதுதான் நமது இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்பது தான்.

1950ல் இந்தியா குடியரசு ஆன போது, அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம். சிறிய வெற்றி.

எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது. பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை.

வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். அதற்குக் காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும் எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார். இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து.

அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! என்று கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...