கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு கடற்படை வீரர் பலி!

செப்டம்பர் 21, 2019 244

சென்னை (21 செப் 2019): சென்னையில் கிரிக்கெட் விளையாடும்போது மார்பில் பந்து பட்டு கப்பற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோகேந்தர் சிங் என்பவர் இந்திய கப்பற்படையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். ஓய்வு நேரத்தைக் கழிக்க விளையாட்டு, ஷாப்பிங் என வீரர்கள் சென்றுள்ளனர். அப்போது ஜோகேந்தர் சிங் (24), விவேக் (26), கமல் (21), விஷ்வா குமார் (22) ஆகிய வீரர்கள் துறைமுகத்தில் உள்ள கார் பார்க்கிங் அருகில் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

அப்போது ஜோகேந்தர் பேட்டிங் செய்த போது, விவேக் என்ற வீரர் பந்து வீசியதாக கூறப்படுகிறது. இதில் விவேக் வீசிய பந்து தரையில் பட்டு ஜோகேந்திரரின் மார்பில் விழுந்துள்ளது. இதனால் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சகவீரர்கள் உடனே அவரை ஐஎன்எஸ் அடையார் நேவி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவரக்ள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த துறைமுக போலீசார் கப்பற்படை வீரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம்தான் ஜோகேந்தருக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிரிக்கெட் விளையாடும்போது மார்பில் பந்து பட்டு கப்பற்படை வீரர் உயிரிழந்த சம்பவம் சகவீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...