தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்!

செப்டம்பர் 21, 2019 284

மதுரை  (21 செப் 2019): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது. போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி 2018 ஆகஸ்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் விசாரணையை நான்கு மாதங்களில் முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ இயக்குநர் சார்பில் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், சிபிஐ-யில் 2018 அக்டோபர் 8-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தொழில்நுட்பம் சார்ந்த 160 ஆவணங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, 100 ஆவணங்களுக்குப் பதில் கிடைத்துள்ளன. 300 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர். தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

சிபிஐ தரப்பில் சீலிட்ட உறையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை நீதிமன்றத்தின் பார்வைக்கு மட்டும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...