கோவையில் கொஞ்சும் சலங்கை!

செப்டம்பர் 23, 2019 266

கோவை (23 செப் 2019): ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் பூஜ்ய ஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி கொஞ்சும் சலங்கை எனும் நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் ருக்மணி விஜயகுமார் அவர்கள் நாட்டியம் ஆடினார். கடந்த செப்டம்பர் 22 ஞாயிறு அன்று, மாலை 6.30 மணிக்கு ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நாட்டிய நிகழ்ச்சியில் ருக்மணி விஜயகுமார் அவர்கள் சுவாமிஜியின் போதனைகளைத் நினைவு கூர்ந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய வந்தேகம் சாரதம் மற்றும் போ சம்போ ஆகிய இரு பாடல்கள் நிகழ்ச்சியின் துவக்கமாக அமைந்தது மிகச் சிறப்பு. ருக்மணி விஜயகுமாரின் அபிநயம், முகபாவனைகள், நடனம் அனைத்தும் ஒன்றினைந்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. கிருஷ்ணன் வெண்ணைத் திருடி திண்பதும், யசோதையிடம் மாட்டிக் கொண்டு சமாளிப்பது, பொய்க் கோபம் கொள்வதும், கிருஷ்ணனை அன்னை கொஞ்சுவதும் என மய்யா மூரி பாடலின் வழியாக கிருஷ்ணலீலாவை கண்முன் நிறுத்தினார். கிருஷ்ணானாகவும், யசோதையாகவும் மாறி மாறி அவர் பிடித்த அபிநயமும், முகபாவமும், நடிப்பும் அவரின் அபாரத் திறமை வெளிப்படுகிறது.

கிருஷ்ணனை நினைத்து ராதை உருகும் ராசலீலாவை இன்னும் என் மனம் பாடலுக்கு ஆடிய ருக்மணி விஜயகுமார் ராதை கண்ணனை நினைத்து உருகும் பொழுதினை கண் முன் நிறுத்தினர். ராதையின் தனிமை, கண்ணீர், ஆனந்தம், காதல் என அவரின் நாட்டியத்தில் உடல் வில்லென்று வளைந்தாலும், முகம் பாவனைகளால் இருந்தது. சுமார் இரண்டு மணி நேரம் தனி ஒருவராக தன் நாட்டியத்தால் அரங்கினை கட்டி வைத்திருந்தார் ருக்மணி விஜயகுமார். இவருக்கு உறுதுணையாக இசையும் அமைந்திருந்தது. பாட்டு ரோகித் பட், புல்லாங்குழல் மகேஷ ஸ்வாமி, மிருதங்கம் ஹர்ஷ சமக, நட்டுவாங்கம் டி.வி. பிரசன்னகுமார். கிருஷ்ணலீலா மற்றும் ராசலீலாவில் புல்லாங்குழல் இசைத்த மகேஷ ஸ்வாமி, பார்வையாளர்கள் கிருஷ்ணனையே நினைத்து மனம் உருகும்படியாக அமைந்ததிருந்தது. சுவாமி தயானந்த சுவாமிகளுக்கு சிறப்பான அர்ப்பணிப்பாக அமைந்திருந்தது இந்நிகழ்ச்சி.

மனதை உருக்கும் இசையும் நளினமான நடனமும் சிறப்பாக இருந்து இனிய மாலைப் பொழுதாக அமைந்தது . விழாவில் பல நடன கலைஞர்கள் சங்கீத வித்வான்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இறுதியில் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி ருக்மணியை பாராட்டினர் .

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜி. ஷண்முகநாதன், கங்கா மருத்துவமனை தலைவர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...