இடைத் தேர்தலில் மமக நிலைப்பாடு குறித்து ஜவாஹிருல்லா அறிக்கை!

செப்டம்பர் 24, 2019 353

சென்னை (24 செப் 2019): விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் பேராசிரிய எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியிலும், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிக்கும். தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசிற்கு ஆதரவாக தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கும், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் மனிதநேய மக்கள் கட்சி களப்பணியாற்றி வெற்றிக்காகப் பாடுபடும்.தமிழக நலனை காக்க மத்திய பாஜ அரசிற்கு ஆதரவாக செயல்படும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசிற்கு ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய வாக்காளர்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...