தஞ்சையில் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டு பிடிப்பு!

செப்டம்பர் 26, 2019 174

தஞ்சாவூர் (26 செப் 2019): தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 வாரங்களாக பகலில் வெயில் அடிப்பதும், மாலையில் மழை பெய்வதும் தொடர்ந்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தால் ஏராளமானோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிலர் சிகிச்சை பெற வந்தவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நீடாமங்கலத்தை சேர்ந்த விவேக் (வயது22), ஒரத்தநாட்டை சேர்ந்த ஆண்டனிசெல்லமேரி (35) மற்றும் காயத்ரி, வெங்கடேசன் ஆகிய 4 பேருக்கு டெங்கு நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 5 பேருக்கு டெங்கு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...