பாடதிட்டத்தில் சமஸ்கிருதம் - திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

செப்டம்பர் 29, 2019 283

சென்னை (29 செப் 2019): அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் திணிப்பை கண்டித்து திமுக மாணவரணி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக் கழகம் இந்த ஆண்டு அதன் சி.இ.ஜி. வளாகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதில் தத்துவம் பாடங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த தத்துவ பாடத்திலே 6 வேதமும் பகவத் கீதையும் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு காவித் தத்துவங்களைப் பாடத் திட்டங்களில் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டு வருகிறது. இதற்கு மாநில அரசு தலையாட்டி வருகிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக இப்போது பகவத் கீதையை நேரடியாகப் பாடத் திட்டத்தில் கொண்டு வந்திருக்கிறது. இந்த அரசுகள் அதற்கு அனுமதிக்கிறது. இந்த அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்.

அதிலும் கொடுமையாக பகவத் கீதை, அறிஞர்கள் பிரான்சிஸ் பேகன் மற்றும் மைக்கேல் பூகோவிற்கு சமமாக வைத்திருக்கிறார்கள். மாணவர்கள் மனதில் நஞ்சு விதைப்பதற்காக பிரான்சிஸ் பேகனையும், மைக்கேல் பூகோவையும் பாதுகாப்பிற்காக கொண்டு வருகிறது மத்திய அரசு.

தொழில் நுட்ப அறிவில், தொழில் நுட்ப அறிவியலில் பகவத் கீதையை கொண்டு வருவதன் நோக்கம் என்ன? அண்ணாவின் பெயரில் பல்கலைக்கழகம், ஆனால் செய்வதோ அறிவியலுக்கு எதிரான வேலை.

அண்ணா பல்கலைக் கழகத்தை காவிப் பல்கலைக் கழக மாற்றத் துடிக்கிறது இந்த அரசு. இந்த மாணவர்கள் மீது அதிலும் முக்கியமாக தமிழக மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை இந்த மத்திய - மாநில அரசுகள் தொடுத்து வருகின்றன.

பாடத்திட்டத்தில் பகவத் கீதையை தடுத்து நிறுத்தி கல்விமுறையை பாதுகாக்க, இந்தி எதிர்ப்பை தடுக்க, புதிய தேசிய கல்விக் கொள்கை-2019 (வரைவு) என்ற பெயரில் மாணவர்களின் உரிமைகள் பறிப்பை தடுத்து நிறுத்திட, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புகளையும், தபால்துறை, வங்கி மற்றும் ரெயில்வே துறை என்று அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்திடவும் சென்னையில் தி.மு.க. மாணவரணி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது.

தி.மு.க. தலைவரின் ஆணைக்கேற்ப நாளை மறுநாள் (1-ந்தேதி) அண்ணா பல்கலைக்கழகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அலைகடலென திரண்டு வாரீர்.

இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...