திருச்சி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தான் - போலீசார் உறுதி!

அக்டோபர் 03, 2019 394

திருச்சி (03 அக் 2019): திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்கள் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் வி.எம்.சி. காம்பளக்சில் 3 அடுக்கு மாடி கட்டிடத்தில் லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடை அமைந்துள்ள இடம் 24 மணிநேரமும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். பஸ் போக்குவரத்தும் இருந்து கொண்டே இருக்கும். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் இரவில் ஊழியர்கள் கடையின் ஷட்டரை பூட்டிவிட்டு சென்று விட்டனர். நேற்று காலை 9 மணிக்கு ஊழியர்கள் வழக்கம்போல் வந்து கடையை திறந்தனர். கடையின் உள்ளே சென்ற அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது.

கடையின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. கண்ணாடி ‘ரேக்’குகளில் அலங்காரமாக வைக்கப்பட்டு இருந்த நகைகள் அனைத்தும் இல்லை. நகைகள் வைக்கப்பட்டு இருந்த அட்டைகள் மட்டும் சிதறிக்கிடந்தன.

நகைக்கடையின் ‘ஷட்டர்’ பூட்டப்பட்டு இருந்த நிலையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த ஊழியர்கள், கடையின் தரைத்தளத்தில் உள்ள பகுதிகளை பார்வையிட்டனர்.

அப்போது ஓர் இடத்தில் ஒரு நபர் மட்டும் உள்ளே நுழையும் அளவுக்கு தரைத்தளத்தின் சுவரில் துளையிடப்பட்டு இருந்ததை கண்டனர்.

நகைக்கடையின் பக்கவாட்டின் இருபுறமும் காலி இடம் உள்ளது. கடையின் இடது புறம் உள்ள இடம் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. கடையை சுற்றி 5 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. இடது பக்க சுற்றுச்சுவர் அருகில் கடையின் சுவரில் கொள்ளையர்கள் துளை போட்டு அதன் வழியாக உள்ளே நுழைந்து நகைகளை அள்ளி சென்று உள்ளனர்.

ரூ.12 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 28 கிலோ தங்க நகைகள், 79 லட்சம் மதிப்புள்ள 1 கிலோவுக்கும் அதிகமான வைரம் மற்றும் பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தங்கள் கடையில் கொள்ளை நடந்த தகவலை ஊழியர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் உடனடியாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா, கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் கோபாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து, கொள்ளை நடந்த நகைக்கடையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைக்குள் ‘ஸ்குரு டிரைவர்’ ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. தடயவியல் துறை இணை இயக்குனர் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடையின் பக்கவாட்டு பகுதியில் உள்ள காலி இடம் வழியாக வந்து சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதால், அப்பகுதியை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பார்வையிட்டார். அங்கு 2 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமராக்களில் கொள்ளையர்கள் எத்தனை பேர் வந்தனர்? என அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் நகைக்கடையில் வேலைபார்த்த ஊழியர்கள் பட்டியலை போலீசார் சேகரித்தனர். அங்கு மொத்தம் 160 பேர் வேலை பார்ப்பது தெரியவந்தது.

ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நகைக்கடை மேலாளர்கள், ஊழியர்கள் உதவியுடன் எவ்வளவு நகை இருப்பு இருந்தது என்றும், அவற்றில் எவ்வளவு தங்க, வைர நகைகள் கொள்ளை போனது என்றும் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது.

நகைக்கடையில் மொத்தம் 12 காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் நேற்று முன்தினம் இரவு காவல் பணியில் 4 பேர் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள், இரவு காவல் பணியின்போது என்ன செய்தார்கள்? என்றும், கொள்ளையர்கள் சுவரில் துளையிடும் சத்தம் கூட கேட்காமலா இருந்தது? என்றும், இரவு நேரம் என்பதால் 4 பேரும் அயர்ந்து தூங்கி விட்டனரா? என்றும் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இரவு காவலர்களுக்கும், கொள்ளைக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டதால், இரவு பணியில் இருந்த காவலர்களை போலீசார் வரவழைத்து அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் பகலில் பணி செய்த காவலர்கள், வாரவிடுமுறையில் இருந்த காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

நகைக்கடையின் 3-வது தளத்தில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பதிவு செய்யும் அறை உள்ளது. அந்த அறைக்கு சென்ற போலீசார், இரவு வேளையில் கடைக்குள் தரைத்தளத்தின் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, கொள்ளையர்கள் இருவர் கடைக்குள் வந்ததை காணமுடிந்தது. ஸ்வெட்டர், மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த கொள்ளையர்கள் இருவரும் தங்களை அடையாளம் காணமுடியாத வகையில் பொம்மை முகமூடி அணிந்து இருந்தனர். மேலும் கைரேகை பதிவாகாமல் இருக்க இரு கைகளிலும் நீல நிற ‘கிளவுஸ்’ (கையுறை) அணிந்து இருந்தனர். அவர்கள் நகைகளை அள்ளி பைக்குள் போடுவதும், கடைக்குள் சர்வசாதாரணமாக நடமாடுவதும் பதிவாகி உள்ளது.

நன்றாக திட்டமிட்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு உள்ளனர். இதனால், கொள்ளையர்களை அடையாளம் காண்பது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.

நள்ளிரவுக்கு பின் சுமார் 2 மணி அளவில் கொள்ளையர்கள் கடைக்குள் நுழைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதிகாலை 4.30 மணிவரை கடைக்குள் சர்வசாதாரணமாக உலாவந்து ‘டிஸ்பிளே’யில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை எடுத்து பைக்குள் போட்டு உள்ளனர்.

கடைக்குள் 2 பேர் நுழைந்து கொள்ளையடித்த போது, அவர்களுக்கு உதவியாக சிலர் வந்திருக்கக்கூடும் என்றும், அவர்கள் சுவரில் துளையிட்ட பகுதிக்கு வெளியே நின்று இருக்கலாம் என்றும், காரியம் முடிந்ததும் அனைவரும் தப்பி சென்று இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஏனெனில், 2 பேர் மட்டும் 30 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்றும், மேலும் சிலரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கடையின் சுவரில் துளையிடப்பட்டுள்ள இடத்தின் அருகே வெளிப்புற பகுதியில் கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி சென்று இருக்கிறார்கள். மோப்பநாய் துப்பறிவதை தடுக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்து உள்ளனர்.

கொள்ளை நடந்த நகைக்கடைக்கு வந்த ‘சைபர் கிரைம்’ போலீசார் நவீன கருவி மூலம், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அருகில் உள்ள செல்போன் கோபுரங்கள் வழியாக இயக்கத்தில் இருந்த செல்போன் எண்களின் பட்டியலையும் சேகரித்தனர். அந்த செல்போன் எண்கள் யாருடையது? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொள்ளையர்களை பிடிக்க திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா ஆகியோர் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என தனிப்படை போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களை இன்னும் 2 நாளில் கைது செய்து விடுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...