பேனர் வைக்க அரசுக்கு நீதிமன்றம் அனுமதி!

அக்டோபர் 03, 2019 291

சென்னை (03 அக் 2019): சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் பேனர் வைக்க அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 11, 12, 13ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் 11ம் ஜின்பிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். அவர்கள், மாமல்லபுரத்தில் உள்ள அழகிய சிறப்பு வாய்ந்த புராதான சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் ஆகியவைகளை பார்வையிட உள்ளனர். மேலும், சீனா- இந்தியா இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பேனர்களை வைத்து பிரதமர் மற்றும் சீன அதிபரை வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் பேனர் வைக்க கடும் கட்டுப்பாடு உள்ளது. மேலும் ஆளும் கட்சியின் பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி பேனரால் சுபஸ்ரீ பலியானார். இதற்குப் பிறகு பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர பலரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் கடந்த 1-ம் தேதி ஆஜராகி, பிரதமர் மற்றும் சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் சார்பில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், நல்லெண்ண அடிப்படையில் சீன அதிபர் இந்தியா வருகிறார். அவரை வரவேற்க 14 இடங்களில் அக்டோபர் 9 முதல் 13வரை பேனர்களை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,

இந்த மனுவுக்கு பேனர் வழக்கில் எதிர் மனுதாரர்களாக உள்ளவர்கள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார். அதன் அடிப்படையில் இன்று நீதிபதிகள் சத்யநாராயணா மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு இடையூறின்றி பேனர் வைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...