திருச்சி நகைக் கடை கொள்ளையில் நடுங்க வைக்கும் பின்னணி!

அக்டோபர் 05, 2019 591

திருச்சி (05 அக 2019): திருச்சி நகைக்கடை திருட்டில் பிரபல திருடன் திருவாரூா் முருகன் தலைமையில் 7 போ் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.12 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 28 கிலோ தங்க நகைகள், 79 லட்சம் மதிப்புள்ள 1 கிலோவுக்கும் அதிகமான வைரம் மற்றும் பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டோரை பிடிக்க திருச்சி மாநகர துணை ஆணையா் ஆ. மயில்வாகனன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்நிலையில் திருவாரூா் மடப்புரம் பாலம் அருகே வியாழக்கிழமை இரவு உதவி ஆய்வாளா் பாரதநேரு தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை மடக்கினா். அவா்களில் ஒருவா் தப்பியோட, மற்றெறாருவா் பிடிபட்டாா்.

அவா் வைத்திருந்த சுமார் 5 கிலோ நகைகளை போலீஸார் கைப்பற்றினா். அந்த நகைகளில் நகைகள் திருடுபோன திருச்சி நகைக்கடையின் முத்திரைகள் இருந்தன. இதைத் தொடா்ந்து அவரை திருவாரூா் நகர காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார் திருச்சி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவா் திருவாரூா் மடப்புரம் பகுதியை சோ்ந்த மணிகண்டன் (32) என்பதும் தப்பியவா் திருவாரூா் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (28) என்பதும் தெரியவந்தது. திருச்சி நகைக் கடை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை அவா் ஒப்புக்கொண்டார்.

திருட்டு சம்பவத்தில் 7 போ் கொண்ட கும்பல் ஈடுபட்டதும், அவா்களில் திருவாரூரைச் சோ்ந்த பிரபல திருடன் முருகன் முக்கிய நபராக இருந்ததும் தெரியவந்தது. திருடிய நகைகளைப் பங்கிட்டுக் கொண்டு வெவ்வேறு வழிகளில் பிரிந்து சென்றபோது மணிகண்டனும், சுரேஷும் வாகனச் சோதனையில் சிக்கியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தகவலறிந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் வரதராஜூ, திருச்சி மாநகர காவல் துணை ஆணையா் ஆ. மயில்வாகனன் உள்ளிட்ட தனிப்படை போலீஸாா் திருவாரூா் விரைந்து சென்று மணிகண்டனிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட 3 தனிப்படைகளில் ஒரு தனிப்படையினா் நாகப்பட்டினத்திலும், மற்ற 2 தனிப்படையினா் திருவாரூரிலும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனா்.

இதற்கிடையே பிடிபட்ட மணிகண்டனை தனிப்படையினா் திருச்சிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினா். ஆனால் வெள்ளிக்கிழமை இரவு வரை திருச்சிக்கு அழைத்து வரப்படவில்லை. ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் வாகனச் சோதனையில் தப்பியோடிய சுரேஷின் தாய் கனகவள்ளி, அவரது நண்பா்கள் மாரியப்பன், குணா ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், திருவாரூா் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷை தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், போலீஸார் இத்தகவலை மறுத்துள்ளனா்.

பல்வேறு மாநிலங்களில் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் தொடா்புடைய திருவாரூா் முருகனுக்கு திருச்சி நகைக்கடை திருட்டில் முக்கியப் பங்கிருப்பது தெரியவந்துள்ளது.

தொடக்கத்தில் தனி நபராக வங்கி, நகைக் கடை, வீடுகளில் கைவரிசை காட்டி வந்த முருகன், நாளடைவில் குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் பெரும் கொள்ளைச் சம்பவங்களை நடத்தி வந்தாா். அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கெடுபிடியால் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இவரது குழுவினா் கைவரிசை காட்டி வருகின்றனா்.

கொள்ளைத் திட்டத்தை வகுத்துக் கொடுப்பதில் வல்லவரான முருகன் மீது 100-க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலீஸாருக்கு சவால் விடும் நபராக உள்ளாா். இவரிடம் 3-க்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளதாகவும், அவற்றில் நம்ப தகுந்தவா்களை மட்டுமே வைத்து கொள்வார் என்பதால், முருகனைப் பிடிப்பது எளிதான காரியம் இல்லை என்கின்றனா் போலீஸார்.

நகை திருட்டு தொடா்பாக சுற்றுவட்டார பகுதி கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீஸாா் ஆய்வு செய்தபோது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனம் மற்றும் காா் சுற்றி வந்துள்ளது. இதில் குறிப்பிட்ட இருசக்கர வாகன பதிவெண் டெல்டா பகுதியைச் சோ்ந்தது என்பதால் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ள மத்திய மண்டல காவல்துறை உத்தரவிட்டிருந்தது. இதன் பேரில் திருவாரூா் பகுதியில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் ஒருவா் சிக்கினார்.

நகைகள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மற்றவா்கள் தலைமறைவாக உள்ளதால் இதர நகைகளை பறிமுதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...