நீட் தேர்வு முறைகேட்டில் சிக்கிய மேலும் இரண்டு மாணவர்கள்!

அக்டோபர் 05, 2019 262

சென்னை (05 அக் 2019): நீட்’ தேர்வில் மேலும் 2 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, தில்லுமுல்லு செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் இர்பான், சிக்கினார். அவரது தந்தையும் கைது செய்யப் பட்டார்.

இந்த நிலையில் மாணவர்கள் பிரவீன், ராகுல் டேவிஸ் ஆகியோரும் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவர் பிரவீன் ஆவடியில் உள்ள ஒரு கல்லூரியில் நீட் தேர்வு எழுதினார். அதே நேரத்தில் அவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து ஒருவர் டெல்லி பிதம்பிபுரா பள்ளியில் நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வில் பிரவீன் 720-க்கு 130 மார்க் வாங்கினார். இவருக்கு பதிலாக டெல்லியில் தேர்வு எழுதிய ஆள்மாறாட்ட நபர் 348 மதிப்பெண் பெற்றார்.

இதுபோல் மற்றொரு மாணவரான ராகுல் டேவிஸ், தமிழ்நாட்டில் கோவை கருமத்தப்பட்டி என்ஜினீயரிங் கல்லூரியில் நீட் தேர்வு எழுதினார். இதில் இவருக்கு 125 மார்க் கிடைத்தது.

இதே நேரத்தில் அவருடைய பெயரில் ஆள்மாறாட்டம் செய்து லக்னோவில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியவர் 306 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வு எழுதிய பிரவீன், ராகுல் டேவிஸ் இருவரும் வெற்றி பெறவில்லை.

அவர்களுடைய பெயரில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியவர்கள் முறையே 348, 306 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றனர். அதை கொண்டு பிரவீன், ராகுல் ஆகியோர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தனர்.

ராகுல், பிரவீன் முறைகேடு விண்ணப்பம் செய்வதில் இருந்தே தொடங்கி உள்ளது. பிரவீன் விண்ணப்ப மனுவில் பிறந்த தேதி 1998 ஜூலை 27 என்று சரியாக உள்ளது. இவருக்கு பதிலாக எழுதியவருக்கும் இதே பிறந்த தேதி உள்ளது. ஆனால் தனது தந்தை பெயரின் இன்சியல், தாய் பெயர் ஆகியவற்றை சிறிது மாற்றி எழுதியுள்ளார்.

இதுபோல் ராகுலும்தான் எழுதிய நீட் தேர்வு விண்ணப்பத்தில் தந்தை பெயரை ஒருவிதமாகவும், தனக்கு பதிலாக எழுதியவரிடம் வேறு விதமாகவும், தாய் பெயரை சிறிது மாற்றம் எழுதியுள்ளார். வீட்டு விலாசங்களையும் 2 மாணவர்களும் மாற்றி எழுதி தில்லுமுல்லு செய்து உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...