சிறுமி ராகவி படுகொலையின் பின்னணியில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

அக்டோபர் 09, 2019 522

சென்னை (09 அக் 2019): சிறுமி ராகவியை படுகொலை செய்யப் பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சேலையூரை அடுத்த செம்பாக்கம், ஏரிக்கரைத் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்ஜினீயர் பார்த்திபன், அவரின் இரண்டாவது மனைவி சூர்யகலா. பார்த்திபனின் மூத்த மனைவியின் மகள் ராகவி.ராகவியை கொலை செய்ததற்காக சூர்யகலாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைதான சூர்யகலா போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் `பார்த்திபனுக்கும் சரண்யாவுக்கும் பிறந்த மகள்தான் ராகவி. சரண்யா கடந்த 2014-ம் ஆண்டு இறந்துவிட்டதால் என்னை 2வதாக பார்த்திபன் திருமணம் செய்துகொண்டார். எங்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார்.

ராகவியை கவனித்துக்கொள்ள சரண்யாவின் அம்மா வளர்மதி எங்களோடு தங்கியிருந்தார். அவர் வீட்டில் தங்கியிருப்பது தொடர்பாக எனக்கும் பார்த்திபனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. மேலும், ராகவி எங்களோடு இருப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை. இதனால் வளர்மதி, ராகவி ஆகியோரை வீட்டிலிருந்து ஊருக்கு அனுப்ப பார்த்திபனிடம் பலதடவைக் கூறியும் அவர் கேட்கவில்லை.

நான் பி.எஸ்ஸி நர்சிங் படித்துள்ளேன். ஆனால், வேலைக்குச் செல்லவில்லை. இந்தச் சூழ்நிலையில், நான் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தேன். அதை சந்தோஷமாக பார்த்திபனிடம் கூறினேன். அதற்கு அவர், ஏற்கெனவே நமக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று கூறினார். அதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இதனால் எனக்கும் பார்த்திபனுக்கும் தகராறு ஏற்பட்டது.

ராகவியால்தான் என் வயிற்றில் இருக்கும் குழந்தையை பார்த்திபன் அழிக்கச் சொல்வதாகக் கருதினேன். இதனால் ராகவியைக் கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால், எந்நேரமும் ராகவியுடன் அவரின் பாட்டி வளர்மதி இருந்தார். இந்தச் சமயத்தில் ஆயுதபூஜைக்காக வளர்மதி ஊருக்குச் சென்றார். ராகவி மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் அன்பாக பேசி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றேன். அவரும் என்னோடு மாடிக்கு வந்து விளையாடினார். அப்போது பார்த்திபன் என் வயிற்றிலிருக்கும் குழந்தையை அழிக்கக் கூறியது நினைவுக்கு வந்தது. இதனால் ராகவி மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே அவரை மாடியிலிருந்து தூக்கி வீசினேன். அம்மா என்று சத்தம்போட்டபடியே அவர் கீழே விழுந்தார்.

அதன்பிறகு எதுவும் நடக்காததுபோல வீட்டுக்குள் வந்தேன். எதுவும் தெரியாதது போல சில மணி நேரத்துக்குப்பிறகு ராகவி குறித்து பக்கத்து வீடுகளில் விசாரித்தேன். அவர்கள் ராகவி எங்கே சென்றார் என்று தெரியவில்லை என்று கூறினர். இதையடுத்து, பார்த்திபனுக்கு போன் செய்து ராகவியைக் காணவில்லை என்று பதற்றத்துடன் கூறினேன். அதை நம்பிய அவரும் வீட்டுக்கு வந்து ராகவியைத் தேடினார். ராகவி காணவில்லை என்ற தகவல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மட்டுமல்லாமல் அந்தத் தெரு முழுவதும் பரவியது. இதனால் அனைவரும் ராகவியைத் தேடினார்கள். நானும் ராகவியைத் தேடினேன். அப்போது புதரிலிருந்து தலையில் பலத்த காயங்களுடன் ராகவி மீட்கப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியபோது எனக்குள் பயம் ஏற்பட்டது. அதை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தேன்.

ராகவி மரணம் தொடர்பாக போலீஸார் என்னிடம் விசாரித்தனர். அப்போது மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கூறினேன். 2 அடி உயரமுள்ள தடுப்புச் சுவர் மீது ராகவி எப்படி ஏறினார் என்று என்னிடம் போலீஸார் கேட்டனர். அதற்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. அந்தக் கேள்வியால் சிக்கிக்கொண்டேன்' என்று கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...