தமிழர் கலாச்சார முறைப்படி சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு!

அக்டோபர் 11, 2019 284

சென்னை (11 அக் 2019): சீன அதிபருக்கு சென்னையில் தமிழர் கலாச்சார முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து இன்று காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீன அதிபரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பிறகு விமான நிலைய பகுதியில் நடந்த கண்கவர் கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு கலை நிகழ்ச்சி கண்டு ரசித்தார்.

பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.சி.டி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு செல்கிறார். 4 மணி வரை அவர் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் மாமல்லபுரம் புறப்பட்டு செல்கிறார்.

முன்னதாக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு பகல் 11.05 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தார். அவரை கவர்னர் பன்வாரிலால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ஜி.கே.வாசன், பிரேமலதா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன், தேவநாதன் யாதவ், ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் உள்பட 53 பேர் வரவேற்றனர்.

அதன் பிறகு 12.35 மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தைக்கு புறப்பட்டு சென்றார். 12.55 மணிக்கு அவரது ஹெலிகாப்டர் திருவிடந்தையில் தரை இறங்கியது. அங்கிருந்து அவர் குண்டு துளைக்காத காரில் கோவளம் கடற்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் சீன அதிபருக்கு வழிநெடுக 34 இடங்களில் மேளதாளங்கள், ஆட்டம் பாட்டங்களுடன் கோலாகல வரவேற்புகள் அளிக்கப்படுகிறது. மாலை 5 மணி அளவில் அவர் மாமல்லபுரம் சென்று சேர்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...