தமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல் - மூன்று பேர் மரணம்

அக்டோபர் 15, 2019 228

சென்னை (15 அக் 2019): திருத்தணி வட்டத்தில் இதுவரை டெங்கு காய்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுடன் 19 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 134 பேர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சலின் தீவிரம் குறையாத மேலும் 11 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 19 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்வதால் சுகாதாரத் துறையினர் போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளிடம் நலம் விசாரித்து குறைகள் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 47பேரில் இருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், வேலூர்,தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் டெங்கு பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திவருகிறார் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்து இருப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கூடுதல் மருத்துவக் குழுக்கள் தேவையா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கொசு மருந்து அடிக்கும் பணிகள் உள்ளிட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், கொசுமருந்து கையிருப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பருவமழைக் காலத்தில் டெங்கு பரவல் வாய்ப்புகள் அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...