அது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்!

அக்டோபர் 16, 2019 304

மதுரை (16 அக் 2019): துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க.வை ஆதரிப்பார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு "யார், யாரோ உளறுவதற்காக என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். வேறு கேள்வி கேளுங்கள். வேடிக்கையாக பேசுவதை கேள்வியாக கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்." என்றார்.

மேலும் "துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. விரைவில் ஒரு சில துரோகிகளை நீக்கி விட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள். சிறையில் இருப்பவர் பேச முடியாத காரணத்தால் வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.." என்றார்.

மேலும் ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் பேசியது குறித்து கேட்டதற்கு, "மற்றவர்களை புண்படுத்தும் வகையில் சீமான் தேவையில்லாத கருத்துக்களை பேசக்கூடாது. ஒரு பிரதமராக இருந்தவரின் படுகொலை பற்றி பேசுவது சரியல்ல. தேவையில்லாத பிரச்சனையை கிளப்ப வேண்டிய அவசியம் இல்லை. சீமான் பேசியதை திரும்ப பெற்றுக்கொண்டால் அவருக்கும் நல்லது, என்னை போன்ற அரசியல்வாதிக்கும் நல்லது." என்றார்.

இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்று அவரிடம் கேட்டதற்கு, "எங்கள் கட்சிக்கு சின்னம் பெறுவதற்கான விசாரணை நாளை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது. இதற்கு வழக்கமாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். எதிராக மனு செய்துள்ளனர். இதை முறியடித்து எங்கள் கட்சிக்கென்று தனி சின்னத்தை பெற்று தேர்தலில் போட்டியிடுவோம். ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டேன். விக்கிரவாண்டி, நாங்குநேரி, வேலூர் இடைத்தேர்தல்களில் ஒவ்வொரு சின்னத்திலும் போட்டியிட முடியாது. பல சின்னங்களில் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். எனவே ஒரே சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிடுவோம்." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...