சிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா!

அக்டோபர் 16, 2019 205

கோவை. (16 அக் 2019): கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறுதுளி அமைப்பினரால் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கோவையின் நீராதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்து பராமரிக்கும் பணியை 16 வருடங்களாக தொடர்ந்து செய்து வருகின்றது சிறுதுளி அமைப்பு. விடுதலை பசுமை பயணம் என கோவையின் சுற்றுச்சூழலை பாதுகாத்து மேம்படுத்தும் பொருட்டு சிறுதுளி அமைப்பு கோவையின் பல்வேறு பகுதிகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றது. இதன் தொடர் முயற்சியாக கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவினை அக்டோபர் 16 அன்று புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நிகழ்த்தியது சிறுதுளி.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, மாநகராட்சி இணை ஆணையாளர்பிரசன்னா குமாரசாமி, கோவை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், நல்லறம் டிரஸ்டின் தலைவர் எஸ்.பி.அன்பரசன், பேக்கர் ஹ்யூக்ஸ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய தலைமை செயல் அதிகாரி ஆஷிஸ் பண்டாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறுதுளி அமைப்பின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் வரவேற்புரையில் ”தொழிற்சாலை, வாகனங்கள் உள்ளிட்ட புகையினால் ஏற்படும் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த ஒரே வழி அதிக மரங்களை நட்டு பராமரிப்பது தான். காற்று மாசுபாட்டினை குறைப்பதில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதுவரை கோவையின் 14 குட்டைகளை தூர்வாரி பராமரித்துள்ளோம். மற்றும் கோவையில் இதுவரை 6 லட்சம் மரங்களை நட்டு உள்ளது சிறுதுளி. எங்களது முக்கியமான குறிக்கோள் 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை மாநகரில் 15 லட்சம் மரங்களை நடவேண்டும் என்பதே. ஒவ்வொரு குடிமகனுக்கு ஒரு மரம் என்று அந்த இலக்கில் செயல்பட்டு வருகிறோம். எங்களுடைய முயற்சிகளுக்கு பேக்கர்ஸ் ஹ்யூக்ஸ் நிறுவனம் பெரிதும் உதவிபுரிகின்றது. சுண்டக்காமுத்தூர் ஐயன்குட்டை, கங்கநாராயன் சமுத்திரம், சொட்டையான் குட்டை உள்ளிட்ட குளங்களை தூர்வாரி பராமரிக்கவும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் மரங்களை நட்டு பராமரிக்கவும் நிதியளித்து உதவினர்.

பேக்கர்ஸ் ஹ்யூக்ஸ் போன்ற நிறுவனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் தருவது வரவேற்கப்பட வேண்டியது. எங்களது முயற்சிக்கு ஒத்துழைத்த சிறைத்துறைக்கு நன்றிகள். இரண்டு வருடங்கள் முன் சிறைச்சாலை வளாகத்தில் சிறுதுளி நட்ட 5,000 மரங்கள் செழித்து வளர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று பேசினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி பேசுகையில் “உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவற்றை சந்தித்து வருகிறோம். இதனை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிறுதுளி போன்ற அமைப்புகள் கோவையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் வேகத்துக்கு அரசும் இணைந்து செயலாற்றவே விரும்புகின்றது. அரசுடன் இணைந்தும் கோவையின் சுற்றுச்சூழல் பாதுகப்புக்கும் பல்வேறு அமைப்புகள் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற ஆக்கப்பூர்வமான,நேர்மறையான முயற்சிகளை அரசு தன் முழுஒத்துழைப்பை எப்பொழுதும் வழங்கும். கோவையின் தொழில்துறை, நிறுவனங்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்வது பாராட்டுக்குரியது. அரசும் மக்களிடையே நீராதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பது, மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையும் கோவையின் பல்வேறு நீராதாரங்களில் அதிகளவு நீர் தேக்கும் முயற்சியில் குளங்களை தூர்வாரி, மேம்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது என்று பேசினார்.

ஆஷிஸ் பண்டாரி பேசுகையில் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவுகிறது. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதும் முகத்தில் மாஸ்க் அணிந்தே வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது போன்ற சூழ்நிலை கோவையில் இல்லை. எதிர்காலத்தில் இது போன்ற சூழலை எதிர்கொள்ளாமல் இருக்க மரங்களை நட வேண்டும். பேக்கர்ஸ் ஹ்யூக்ஸ் நிறுவனம் அதற்கான முயற்சியில் சிறுதுளியுடன் இணைந்து செயலாற்றுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீராதாரங்கள் பாதுகாப்பது, காற்று மாசுபாட்டைக் குறைக்க மரங்கள் நடும் முயற்சிகளில் பேக்கர்ஸ் ஹ்யூக்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்படும். முதற்கட்டமாக சிறைச்சலை வளாகத்தில் 1000 மரங்களை நடும் பணியை துவக்கியுள்ளோம் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சிறுதுளியின் உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...