ஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு!

அக்டோபர் 17, 2019 253

விக்கிரவாண்டி (17 அக் 2019): தேர்தலுக்காக மக்களைச் சந்தித்து ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காணை பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து புதன்கிழமை மாலை திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

இடைத்தேர்தலுக்காக பொதுமக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்பது போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து, அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி காணை, மாம்பழப்பட்டு, திருவாமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை மாலை பிரசாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: தேர்தல் என்றதுமே திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு "திண்ணை' ஞாபகம் வந்துவிடுகிறது. குறைகளை தீர்க்கப்போவதாகக் கூறிக்கொண்டு, மக்களைச் சந்தித்து நாடகமாடுகிறார். துணை முதல்வராக, அமைச்சராக இருந்தபோது, பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காணாத அவர், தற்போது மக்களிடம் மனு வாங்கி என்ன செய்யப் போகிறார்? அந்த மனுக்களை அரசு, முதல்வர், அமைச்சர்களிடமோதான் தந்தாக வேண்டும்.

மக்களை ஏமாற்றிய ஸ்டாலின்: அவர், கடந்த மக்களவைத் தேர்தலில் நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, ரூ.72 ஆயிரம் உதவித் தொகை என நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார். ஆனால், நாங்களோ நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை அளித்து, நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டோம். அதனால்தான், இந்த இடைத் தேர்தலில் நெஞ்சை நிமிர்த்தி உங்களிடம் (மக்களிடம்) வாக்கு கோரி வந்துள்ளோம். பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிய அவருக்கு இந்த இடைத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தமுள்ள 40 ஆயிரம் ஏரி, குளங்களைத் தூர்வார நடவடிக்கை எடுத்துள்ளோம். இவற்றில், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 26 ஆயிரம் ஏரி, குளங்கள் ரூ.1,250 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. முதல் முறையாக, நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் ரூ.1,000 கோடி ஒதுக்கி தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்றன. நிகழாண்டு மட்டும் ரூ.600 கோடியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.

விவசாயிகளின் நலனே லட்சியம்: விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டால்தான் உணவு உற்பத்தி அதிகரிக்கும். இதைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கான நலன்களை இந்த அரசு லட்சியமாக ஏற்று செயல்பட்டு வருகிறது. "உழவன்' செயலி மூலம் மானியம், உரம், மருந்துகள், விதைகள் குறித்த தகவல்கள், சந்தை நிலவரங்கள் உடனுக்குடன் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகின்றன. இந்திய அளவில் தமிழகத்தில்தான், விவசாயிகளுக்கு வறட்சி நிதி பெற்றுத் தரப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீடு மூலம் அதிகத் தொகையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

தலைவர்களுக்கு மரியாதை: சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நன்மைகளைச் செய்ததாக மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் மகளிர் குழுவினருக்கு மொத்தம் ரூ.9,838 கோடி கடனுதவிகள் அளிக்கப்பட்டன. ஆனால், 2011 முதல் 2019 வரையிலான அதிமுக ஆட்சியில், 57 ஆயிரத்து 316 கோடி அளவுக்கு மானியக் கடனுதவிகளை வழங்கியுள்ளோம். 68 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை தொடங்கியதும் அதிமுக ஆட்சியில்தான்.மறைந்த தலைவர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என தேர்தலை மனதில்கொண்டு திமுக வாக்குறுதி அளிக்கிறது. ஆனால், மக்களுக்காக உழைத்த மறைந்த தலைவர்கள் 40 பேருக்கு நினைவு மண்டபம், சிலைகளை எழுப்பியும், அரசு விழா எடுத்தும் மரியாதை செய்தது அதிமுக அரசுதான்.

அதிமுக ஆட்சியில் 69% இடஒதுக்கீடு: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது அதிமுக ஆட்சியில்தான். வன்னியர் சமூக மக்களின் எதிர்பார்ப்புகளும் விரைவில் நிறைவேறும். நலத் திட்டப் பணிகள் தொடர்ந்திட, அதிமுக வேட்பாளர் ஆர்.முத்தமிழ்செல்வனை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.பிரசாரத்தில் அதிமுக மாவட்டச் செயலரும் சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முதல்வரின் பிரசாரத்தின்போது, விட்டுவிட்டு மழை பெய்தது. எனினும், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...