திருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு?

அக்டோபர் 17, 2019 599

சென்னை (17 அக் 2019): திருச்சி பிரபல நகைக்கடை கொள்ளையன் முருகனுக்கும் பிரபல தமிழ் நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது.

இந்த கும்பலை சேர்ந்த மணிகண்டன் திருவாரூர் போலீசில் சிக்கினார். தப்பி ஓடிய சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் கடந்த 10-ந் தேதி சரண் அடைந்தார். பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் முருகன் சரண் அடைந்தார். மேலும் தனிப்படை போலீசார் திருவாரூரில் சுரேசின் தாயார் கனகவள்ளியையும், மதுரையில் முருகனின் கூட்டாளியான கணேசனையும், நகைகளை விற்று கொடுக்க உதவியாக இருந்த ராதாகிருஷ்ணன் என இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்த சுரேசை திருச்சி கோட்டை போலீசார் கடந்த 14-ந் தேதி முதல் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். சுரேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணையின்போது சுரேஷ் தெரிவித்ததாவது:

எனது மாமா (முருகன்) என்னை கதாநாயகனாக வைத்து சினிமா படம் எடுக்க திட்டமிட்டார். அதன்படி, 2013-ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க தொடங்கினோம். 45 நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினையால் படம் பாதியில் நின்று விட்டது.

அதன்பிறகு தெலுங்கில் மான்சா என்ற படத்தை எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி தொகையை கொடுக்க முடியாமல் போனதால், அந்த நடிகை ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால், முழுவதுமாக படம் எடுத்து முடிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சினை எழுந்ததால், மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.

அதன்படி, திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளை போட்டு நகைகள், பணத்தை மாமா முருகன் திட்டபடி கொள்ளையடித்தோம். பின்னர், மீண்டும் படம் எடுப்பதற்காக தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நாயகியாக நடித்து பல வெற்றிப்படங்களை தந்த பிரபல நடிகையை ஐதராபாத்தில் நானும், மாமா முருகனும் சந்தித்தோம். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது, தான் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் பிசியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறோம் என்றோம். அவரும் ஆர்வமாக அப்படியா? என்றார். பின்னர் மாமா, வங்கியில் கொள்ளையடித்த நகை சிலவற்றை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கினார். அதை அந்த நடிகையும் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார். கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் நானும், மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

முருகனுடன் தொடர்பிருப்பதாக கூறப்படும் நடிகை, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நடிகை என்று கூறப்படுகிறது. இதனால் கொள்ளையன் முருகன், சுரேஷ் உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் உள்ள நடிகைகள் கிலியில் உள்ளனர். நடிகைகளிடம் விசாரித்தால்தான் கொள்ளையன் சுரேஷ் சொன்னது உண்மையா? என தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...