ரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்!

அக்டோபர் 19, 2019 250

சென்னை (19 அக் 2019): கல்கி சாமியார் ரூ 500 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் ஆரம்பத்தில் எல்ஐசி ஏஜெண்டாக இருந்தவர். இதற்கு பிறகுதான் சாமியாராக மாறி, கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தார். தன் பெயரையும் கல்கி பகவான் என்றும் சூட்டிக் கொண்டார்.

சாமியாருக்கு கொஞ்ச நாளாக உடம்பு சரியில்லாத காரணத்தினால் , அவரது குடும்பத்தினர்தான் இந்த ஆசிரமத்தை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சாமியார் மகன் கிருஷ்ணாதான் எல்லா ஆசிரம பொறுப்பையும், கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த ஆசிரமத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் நிதி வழங்குவதாக கூறப்படுகிறது. அதனால் கிருஷ்ணா, வரி ஏய்ப்பு செய்ததாகவும், பணப்பரிவர்த்தனைகளை மறைத்ததாகவும் புகார் வெளிவந்தது

இந்நிலையில் கல்கி சாமியாரின் ஆசிரமம் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில், 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் கணக்கில் வராத 49 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 18 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது.

26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 271 கேரட் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கல்கி ஆசிரம நிர்வாகம் சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலுள்ள பல நிறுவனங்களில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...