இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அக்டோபர் 19, 2019 378

நாங்குநேரி (19 அக் 2019): நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் விமர்சித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தமிழகம் எங்கும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இடைத்தேர்தல் பணிக்காக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு களக்காடு ஒன்றியம் கேசவனேரி கிராமத்துக்கான பொறுப்பும் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் என்கிற ஃபைசல் உள்ளிட்ட சிலர், அமைச்சரை சந்தித்து தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்துத் தருமாறு மனு அளிக்கச் சென்றுள்ளனர்.

மனு அளிக்கச் சென்றவர்களிடம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். அத்துடன், தமிழகத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் காஷ்மீரத்தில் நடந்தது போல செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளார். அதற்கு, தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மனு அளித்தவர்கள் தெரிவிக்கையில், நாங்கள் மன்னு அளிக்க சென்றோம், எங்களைப் பார்த்ததும் காரில் இருந்தபடியே திடீரென ஆத்திரத்துடன் கத்தத் தொடங்கினார். ‘முஸ்லிம்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீங்களே... நாங்க ஏன் உங்களுக்கு உதவி செய்யணும்? யாருக்கு ஓட்டுப் போட்டீங்களோ அவங்கள்ட்டயே மனுவைக் குடுங்க. நீங்க ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த தி.மு.க எம்.பி ஞானதிரவியத்திடம் மனுவைக் கொடுங்க. நீங்களும் ஓட்டுப்போட மாட்டீங்க. கிறிஸ்டினும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டான். பிஷப், பாதிரியார்கள் எல்லோரையும் கூப்பிட்டுச் சொல்லிடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்க. அப்புறம் ஏன் உங்களுக்கு நான் செஞ்சு தரணும்?

பி.ஜே.பி கூட்டணியில் நாங்க இருக்கிறதால தமிழ்நாட்டில் மோடி ஆட்சி செய்யுற மாதிரி நீங்க நினைக்கிறீங்க. இப்படி நீங்க எங்களைப் புறக்கணிச்சா ஜம்மு-காஷ்மீர்ல உங்களை ஒதுக்கி வச்சது மாதிரி இங்கேயும் ஒதுக்கிவைக்க வேண்டியிருக்கும்’’ என்று சரமாரியாகப் பேசினார். மனுவைக் கையால்கூட தொட மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள், அங்கிருந்து வந்துவிட்டோம்’’ என்றார்..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...