உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது - பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

அக்டோபர் 20, 2019 179

சென்னை (20 அக் 2019): உள்நோக்கம் கொண்ட FSSAIன் "ஆய்வறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடிய அத்தியாவசியமான உணவுப் பொருளாக விளங்கும் பால் தமிழகம், கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அசுத்தமான வகையில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது எனவும் கடந்த 18ம் தேதி உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது கடும் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 155மில்லியன் டன் பால் உற்பத்தியாகும் இந்தியாவில் நாடு முழுவதும் சுமார் 6432 பால் மாதிரிகளை மட்டும் ஆய்விற்கு எடுத்து அதனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதும், மூல பாலின் அளவை விட பூச்சிக்கொல்லிகளும், "அப்லாடாக்சின்" என்ற அசுத்தமும் அதிகளவில் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் அசுத்தமான பால் விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில் கடந்த 2012ம் ஆண்டு "பாலில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படுகிறது அவற்றை தடுக்க வேண்டும்" என உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலப்படம் இல்லாத மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளது.

மேலும் பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் பார்மாலின், ஹைட்ரஜன் பெராக்சைடு, வெள்ளை பெயிண்ட், வார்னிஷ் உள்ளிட்ட உயிருக்கு தீங்கிழைக்கும் பல்வேறு ரசாயனங்கள் பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தற்போதைய ஆய்வறிக்கையில் மேற்கண்ட மாநிலங்களில் குறைந்த அளவே பால் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்திருப்பது தெரிய வருவதோடு, அந்த மாநிலங்களில் மிகவும் குறைந்த அளவே தரம் குறைந்த பால் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருப்பது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

ஏனெனில் அண்மையில் கூட வடமாநிலத்தில் பொதுமக்கள் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கொண்டு செயற்கையாக பால் தயாரித்து விற்பனை செய்த தொழிற்சாலையை அதிகாரிகள் சீல் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்து பல ஆயிரம் டன் பால் மற்றும் பால் பொருட்களை பறிமுதல் செய்ததை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.

இந்நிலையில் அசுத்தமான பால் விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக வெளியாகியிருக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வறிக்கை தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.

எனவே தமிழக அரசு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பால் தொடர்பான ஆய்வறிக்கை குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடுவதோடு பொதுமக்களுக்கு தரமான பால் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...