சென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்!

அக்டோபர் 22, 2019 171

சென்னை (22 அக் 2019): அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்துள்ளது.

இந்த நிலையில் தென் தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் சுழற்சி நிலவி வருகிறது.

அதுபோல தென் வங்க கடல் வடக்கு தமிழகத்தில் வளிமண்டலத்திலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியும் நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் வட தமிழகம் திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் மிக கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

டெல்டா மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூரில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும். 22-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வங்க கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் 2, 3 நாட்களுக்கு மழை தீவிரம் அடையும்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிக்கு இன்று (21-ந் தேதி), நாளை (22-ந் தேதி) மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...