தம்பியை நெம்பி எடுத்த சுங்கச் சாவடி ஊழியர்கள்!

அக்டோபர் 22, 2019 269

புதுக்கோட்டை (22 அக் 2019): சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்துவிட்டு உருட்டுக் கட்டையால் தாக்குதலில் ஈடுபட்ட, நாம் தமிழர் கட்சிப் பிரமுகரை மடக்கி பிடித்து, சுங்கச் சாவடி ஊழியர்கள் தர்மஅடி கொடுத்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை அருகே வினோத் குமார் என்ற நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளார் வினோத் குமார். திரும்பி வந்த போதும் கட்டணம் செலுத்த மறுத்துவிட்டர். மேலும் சுங்கச் சாவடியில் பணியில் இருந்தவர்களை வட மாநிலத்தவர்கள் என நினைத்து தமிழ்நாட்டில் வந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பதா ? என்று உருட்டுக் கட்டையை எடுத்து சுங்கச்சாவடி ஊழியரை வினோத் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்கிய பின்னர் தான் தெரிந்துள்ளது சுங்கச்சாவடிப் பணியில் இருக்கும் அத்துணை பேரும் தமிழர்கள் என்று. அங்கிருந்த 15க்கும் மேற்பட்டோர், உருட்டுக்கட்டையுடன் நின்ற வினோத்குமாரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி தர்மஅடி கொடுத்து விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சட்டை கிழிந்த நிலையில் வினோத்குமார் தப்பியுள்ளார்.

முதுகுத் தோல் பிய்ந்து பலத்த காயம் அடைந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த நாம் தமிழர் தம்பி வினோத்குமார், இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி முதலில் புகார் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

சுங்கச்சாவடி தரப்பில் புகார் அளித்ததால் வினோத்குமாரும் புகார் அளித்ததாகவும், இதன் பேரில் சுங்கச்சாவடி ஊழியர்கள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி தொகுதி வேட்பாளராக களம் கண்டவர் வினோத் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...