என்று தீரும் இந்த சோகம்!

அக்டோபர் 26, 2019 257

மணப்பாறை (26 அக் 2019): திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுக் குழந்தையை மீட்க, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் விடிய விடிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான பிரிட்டோ ஆரோக்கியதாஸ். இவரது இரண்டு வயது மகன் சுஜித் வின்சென் நேற்று மாலை 5.30 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். 5 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு பயன்பாடில்லாமல் திறந்த நிலையில் இருந்த இந்த ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் 26 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த மணப்பாறை தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், குழந்தையை மீட்கும் முயற்சியாக ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 20 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் பாறை இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் உருவாக்கிய பிரத்யேக இயந்திரத்தின் உதவியுடன் குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. குழந்தையுடன் தாய் கலாமேரி மற்றும் உறவினர்கள் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். கலாமேரி பேசியபோது உம் என்று உள்ளே இருந்த குழந்தையின் பதில் வந்தது.

இரவு 10.30 மணி அளவில் இயந்திரத்தின் வழியாக விடப்பட்ட கயிற்றைக் கொண்டு கைகளில் சுருக்கு போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றது.அப்போது, குழந்தையின் ஒரு கையில் சுருக்கு சரியாக மாட்டிய நிலையில், மற்றொரு கையில் சுருக்கு மாட்டும்மோது கயிறு தவறிவிட்டது. தொடர்ந்து நடைபெற்ற இம்முயற்சியிலும் மீண்டும் தொய்வு ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணி முடுக்கிவிடப்பட்டது.

மதுரை, திருச்சியிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். கோவையிலிருந்து ஒரு மீட்புக் குழு வரவழைக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் கொண்டு வந்த சாதனங்களை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பல மணி நேரமாக நடைபெற்ற மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.

அதன்பின்னர் ஆழ்துளை கிணற்றை சுற்றி 5 பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீண்டும் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று அதிலும் தொய்வு ஏற்பட்டது. அதிகாலை 2.30 மணிக்கு ஐஐடியைச் சேர்ந்த ஒரு குழுவினர் வந்து பிரத்யேக சாதனங்களை கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே குழந்தை மீட்கப்பட்டால் அவருக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சம்பவ இடத்தில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அருகில் இருந்து குழந்தை மீட்புப் பணிகளைக் கண்காணித்து, ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

ஆழ்துளை கிணற்றில் குழதைகள் வீழ்வது தொடர்கதையாகி வரும் நிலையில் இதனை சரி செய்ய என்ன செய்யப் போகிறது அரசு.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...