ஒருநாள் இரண்டு நாள் அல்ல ஐந்து வருடங்கள் - பெண்ணின் தகிடுதத்தம் சிசிடிவி மூலம் அம்பலம்!

அக்டோபர் 26, 2019 626

சென்னை (26 அக் 2019): வேலை செய்த வீட்டில் 5 ஆண்டுகளாக லட்சக் கணக்கில் திருடிய பெண் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை அபிராமபுரம் 4-வது தெருவில் உள்ள பங்களா வீட்டில் குடியிருப்பவர் தொழிலதிபர் பெரியண்ணன். இவரின் வீட்டின் படுக்கையறையில் உள்ள பீரோவிலிருந்து பணம் திருட்டு போனது. ஆரம்பத்தில் பெரியண்ணன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பீரோவிலிருக்கும் பணம் எப்படி குறைகிறது என்று தெரியாமல் பெரியண்ணன் குழப்பமடைந்தார்.

வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் படுக்கையறையில் கேமரா இல்லை. இதனால் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை பெரியண்ணன் ஆய்வு செய்தார். அப்போது, வீட்டுக்குள் வெளிநபர் யாரும் வந்து செல்லவில்லை. இதனால் யார் மீதும் சந்தேகப்படுவது என்று தெரியாமல் பெரியண்ணன் திகைத்தார். இருப்பினும் பீரோவில் வைக்கப்படும் பணம் மட்டும் குறைந்துகொண்டே இருந்தது.

இதனால் பணத்தைத் திருடுபவரை கையும் களவுமாகப் பிடிக்க பெரியண்ணன் திட்டமிட்டார். இதற்காக வீட்டின் படுக்கையறையில் ரகசிய பெண் கேமரா ஒன்றை பீரோவை நோக்கி பெரியண்ணன் வைத்தார். அதை தினமும் ஆய்வு செய்தார். இந்தச் சமயத்தில்தான் பெரியண்ணன் வீட்டில் வேலை செய்யும் பெண் உஷா, படுக்கையறைக்குள் வரும் காட்சி பதிவாகியிருந்தது. அதோடு அவர் பீரோவை சாவி மூலம் திறப்பதைப் பார்த்து பெரியண்ணன் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் பீரோ சாவி, தன்னிடம் இருக்கும் போது உஷா எப்படி பீரோவைத் திறக்கிறார் என்று யோசித்தார் பெரியண்ணன். இதனால் உஷாவைப் பிடிக்க பெரியண்ணன் திட்டமிட்டார்.

வழக்கம் போல வீட்டு வேலை முடிந்து உஷா வீட்டுக்குத் திரும்பினார். அவர் சென்ற பிறகு ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளோடு அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் வீட்டில் வேலை செய்யும் உஷா என்பவர் 19,85,000 ரூபாயைத் திருடிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்தாஸ், மாதையன், தலைமைக் காவலர் சரவணன் மற்றும் தனிப்படை போலீஸ் பிரிவில் உள்ள பிரதீப், அன்பு, ஞானபிரகாசம் ஆகியோர் உஷாவின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு உஷாவிடம் விசாரித்தனர். அப்போது அவர், தான் திருடவில்லை என்று பிடிவாதமாகக் கூறினார். உடனடியாக போலீஸார் கையோடு கொண்டு சென்ற வீடியோவை உஷாவிடம் காண்பித்தனர். அதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பணத்தைத் திருடியதை ஒப்புக் கொண்டார்.

அபிராமபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட உஷாவிடம் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் அவர் கூறிய தகவல்களைக் கேட்டு போலீஸாரே அதிர்ச்சியடைந்தனர். அதாவது, கடந்த 5 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைத் திருடி அதில் 40 சவரன் தங்க நகைகளை உஷா வாங்கி வைத்திருந்தார். அதோடு வீட்டிலும் லட்சக்கணக்கில் பணத்தைப் பதுக்கி வைத்திருந்தார். உஷாவிடமிருந்து 18 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...