சிறுவன் சுஜித்து மீட்புப் பையை தைத்துக் கொடுத்த தாய் - மனதை உருக்கும் காட்சி!

அக்டோபர் 26, 2019 348

சென்னை (26 அக் 2019): ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித்தை மீட்க மீட்புக் குழுவினரின் கோரிக்கையை ஏற்று சுஜித்தின் தாய் மீட்புப் பையைத் தைத்துக் கொடுத்த காட்சி அனைவரது கண்களையும் குளமாக்குகின்றன.

மணப்பாறை: திருச்சி மணப்பாறை அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை வெள்ளிக்கிழமை மாலை அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

இந்த ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் வின்சென், 26 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டிருந்த நிலையில், அவனை மீட்கும் பணி தவிரமாக நடைபெற்று வருகிறது. தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த மணப்பாறை தீயணைப்புத்துறை குழந்தையை மீட்க பல முயற்சியில் ஈடுபட்டனர்.

குழந்தை விழுந்த சமயத்தில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்தான். ஆனால் தற்போது 17 மணி நேரம் கடந்த நிலையில் மீட்பு பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை தற்போது 71 அடி ஆழத்திற்கு சென்றிருப்பதாக தெரிகிறது.

அவன் மீது ஈரப்பதமான மண் சரிந்து விழுந்திருப்பதும், சிறுவன் அசைவற்று இருப்பதும் மீட்புக் குழுவினருக்கு மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஆனால், குழந்தையை உயிரோடு மீட்பதில் மீட்புக் குழுவினர் நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சிறுவன் சுஜித்தை மீட்க நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் ஏற்படும் விபத்துகளின் போது மீட்புப் பணியில் ஈடுபடும் மீட்புக் குழு விரைந்துள்ளது.

இதற்கிடையே, மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்க ஒரு துணிப் பை தேவை என்று சொன்ன போது, குழந்தை சுஜித்துக்காக அவரது தாயாரே கண்ணீரோடு அந்த பையை தைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானது.

தனது மகன் உயிரோடு மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையோடு அவர் பையைத் தைத்துக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கும் ஒட்டுமொத்த தமிழர்களும், நிச்சயம் அவன் மீண்டு வந்து தனது தாய் தைத்துக் கொடுக்கும் புத்தாடையை தீபாவளிக்கு அணிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...