சென்னையில் பரபரப்பு - தீபாவளியன்று அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை!

அக்டோபர் 28, 2019 248

சென்னை (28 அக் 2019): தீபாவளித் தினத்தன்று சென்னை ஐசிஎஃப் அ.தி.மு.க பிரமுகர் வழிமறித்து மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை, வில்லிவாக்கம், ராஜமங்கலம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (58). இவர், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஐ.சி.எப் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாகப் பணியாற்றினார். அ.தி.மு.க பிரமுகரான ஜானகிராமன், ஐசிஎஃப்-பின் அண்ணா தொழிற்சங்கத்தின் பொருளாளராகவும் இருந்தார். இது தவிர ராஜமங்கலத்தில் உள்ள இளங்காளியம்மன் கோயிலை நிர்வகிக்கும் முக்கிய பதவியிலும் இருந்தார்.

இந்நிலையில் தீபாவளிப் பண்டிகை தினத்தன்று பைக்கில் வெளியில் புறப்பட்டார். இரவு 10 மணியளவில் கொளத்தூரிலிருந்து வீட்டுக்கு ஜானகிராமனும் அவருடைய நண்பர் தயாபரனும் பைக்கில் வந்தனர். கொளத்தூர் 31-வது தெரு, ஜி.கே.எம் காலனி பகுதியில் வந்தபோது இன்னொரு பைக்கில் வந்த கும்பல் வழிமறித்தது. பிறகு, ஜானகிராமன் வந்த பைக்கின் மீது அந்தக் கும்பல் மோதியது. இதனால் நிலைதடுமாறி ஜானகிராமனும் அவருடைய நண்பரும் கீழே விழுந்தனர்.

உடனே கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் அந்தக் கும்பல் ஜானகிராமனை வெட்டியது. அதை அவருடைய நண்பர் தடுத்தார். இதனால் அவருக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. இதனால் அங்கிருந்து அவர் ஓடிவிட்டார்.

இதையடுத்து ஜானகிராமனை குறி வைத்து அந்தக் கும்பல் வெட்டியது. குறிப்பாக, அவரின் தலை மற்றும் கழுத்து பகுதியிலேயே அதிகமாக வெட்டியது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜானகிராமன் உயிருக்குப் போராடினார். அவர் இறந்துவிட்டார் எனக் கருதிய அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அதன் பிறகு, சம்பவ இடத்துக்கு வந்த ஜானகிராமனின் நண்பர் கொடுத்த தகவலின்படி பெரவள்ளூர் போலீஸாரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அங்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸில் ஜானகிராமனை ஏற்றிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜானகிராமனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அ.தி.மு.க தொழிற்சங்க நிர்வாகி ஜானகிராமன் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...