நான்கு வயது சிறுமி மாயம் - 24 நாட்களாக தவிக்கும் பெற்றோர்!

அக்டோபர் 29, 2019 298

கோவை (29 அக் 2019): கோவையில் நான்கு வயது சிறுமி காணாமல் போய் 24 நாட்கள் ஆகிய நிலையில் போலீஸ் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான ஜெயக்குமார். இவரது மனைவி கவிதா.இவர்களுக்கு 7 வயதில் வெற்றிவேல் என்ற மகனும் 4 வயதில் ஷாமினி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

ஜெயக்குமார் தம்பதி, அதே ஊரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 5 ம் தேதி வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ஷாமினி திடீரென காணாமல் போனார்.

இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வருகின்றனர். சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை.

சிறுமி காணாமல் போய் 24 நாட்கள் ஆன நிலையில், எந்த தகவலும் கிடைக்காமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். இதனால் குமாரபாளையம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த 90 குடும்பங்கள் சிறுமி வராததால் தீபாவளியும் கொண்டாடவில்லை. சிறுமி திரும்பி வரும் நாள்தான் எங்களுக்கு தீபாவளி என்கின்றனர். அப்பகுதி மக்கள்.

மேலும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீசை எதிர்த்து போராட்டத்தில் குதிக்க அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...