பிரசவத்தின் போது தாய் மரணம் - அரசு மருத்துவமனையில் நடந்த சோகம்!

அக்டோபர் 30, 2019 217

தரும்புரி (30 அக் 2019): தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் - கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சமேட்டைச் சேர்ந்த பிரியா தம்பதிக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது முறையாக பிரியா கர்ப்பம் தரித்தார்.

பிரசவத்திற்காக பாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியா பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்றிரவு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சுகப் பிரசவ முறையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்திற்கு பிறகு அவருக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதிகாலையில், சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்து விட்டதாக உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உரிய சிகிச்சை அளிக்காததே பிரியா உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையை முற்றுகையிட்டதுடன், தரையில் அமர்ந்து படுத்தும் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். ஒரு தரப்பினர், சாலைக்குச் சென்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது மூதாட்டி ஒருவர், பேருந்தை மறித்து சாலையில் படுத்துக் கொண்டார்.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் கலைந்து சென்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...