தொடரும் ஏழாவது நாள் போராட்டம் - உரிய சிகிச்சை இன்றி நோயாளிகள் அவதி!

அக்டோபர் 31, 2019 168

சென்னை (31 அக் 2019): ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 7-வது நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டம் நீடித்து வருகிறது.

காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உயர்த்துவது, மருத்துவ மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில், 7-வது நாளாக இன்றும் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதம் மேற்கொண்ட 5 பேரில் 4 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் மூன்று அரசு மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்களும், முதுநிலை மருத்துவ மாணவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, மருத்துவக்கல்வி, ஊரக பணிகள் இயக்குநருக்கு, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...