பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட சிபிஐ மறுப்பு!

நவம்பர் 04, 2019 210

சென்னை (04 நவ 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ மறுத்துவிட்டது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் சங்கம் சாந்த குமாரி உள்ளிட்ட 10 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இறுதி அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கின் விசாரணை ரகசிய விசாரணையாக நடத்த இருப்பதால் இறுதி அறிக்கையை அம்பலப்படுத்தும் வகையில் மனுதாரர்களுக்கு வழங்க முடியாது என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிட எந்த ஆட்சேபமும் இல்லை எனத் தெரிவித்த அவர், விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...