வங்கக் கடலில் உருவானது புதிய புயல் சின்னம்!

நவம்பர் 06, 2019 267

சென்னை (06 நவ 2019): அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் இது நாளை புயலாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அந்தமான் கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக கூறினார்.

இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வட ஒடிசா, மேற்கு வங்கக்கடல் பகுதியில் நகரக்கூடும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதன் காரணமாக மீனவர்கள் இன்று அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், நாளை மற்றும் நாளை மறுநாள் மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த 2 - 3 தினங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரிய மழைக்கு வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் முதல் இன்று வரை 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் இது இயல்பை விட 8 சதவீதம் அதிகம் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...