இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது!

நவம்பர் 06, 2019 295

தஞ்சாவூர் (06 நவ 2019): தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் காவி உடை போர்த்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி மெயின் சாலையில் அமைந்துள்ளது 5 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை. இங்குள்ள பொதுமக்களால் 200 வருடங்களுக்கு முன்பு இந்தச் சிலை அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முக்கிய விஷேச தினங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையின் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டியதுடன் முகத்தில் சாணம் அடித்துவிட்டுச் சென்றனர். இதனால், கொதித்தெழுந்த மக்கள், `திருவள்ளுவருக்கு அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும்' என கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தனிப்படை அமைத்து இச்செயலைச் செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், சதய விழாவை முன்னிட்டு ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தனது ஆதரவாளர்களுடன் நேராக பிள்ளையார்பட்டிக்குச் சென்றார். அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடையைப் போர்த்தியவர், ருத்ராட்ச மாலையை அணிவித்து சிலையின் நெற்றியில் திருநீறு பூசினார். இதைத் தொடர்ந்து கற்பூரம் ஏற்றி தீபத்தைக் காட்டிவிட்டு, திருவள்ளுவரை வணங்கிவிட்டு கீழே இறங்கிச் சென்றார். இச்சம்பவத்தை அடுத்து அர்ஜுன் சம்பத் கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது இந்துத்வா அமைப்பினர் திருவள்ளுவரை வைத்து அரசியல் நடத்துவது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...