பப்ஜி விளையாட்டின் விபரீதம் - மாணவர் சுட்டுக் கொல்லப் பட்டதன் பின்னணி!

நவம்பர் 06, 2019 312

சென்னை (06 நவ 2019): சென்னையில் மாணவர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்லத்தைச் சேர்ந்தவர், முகேஷ். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவந்துள்ளார். வேங்கடமங்கலத்தில், தனது வீட்டுக்கு அருகேயுள்ள நண்பர் விஜயகுமாரின் வீட்டுக்கு நேற்று காலை சென்ற முகேஷ், நண்பருடன் சேர்ந்து தனியறையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அறைக்கு வெளியே ஹாலில் விஜயகுமாரின் சகோதரர் உதயாவும் மற்றொரு சகோதரர் அஜித்தும் அவர் மனைவியும் ஒரு அறையில் இருந்துள்ளனர்.

அப்போது, துப்பாக்கிச் சத்தம் `படார்’ எனக் கேட்க, வெளியே உட்கார்ந்திருந்த உதயா உள்ளே சென்று பார்த்துள்ளார். தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் முகேஷ் துடித்துக்கொண்டிருக்க, எந்தச் சலனமும் இல்லாமல் கையில் துப்பாக்கியுடன் விஜயகுமார் அருகில் நின்றுள்ளார். உதயா சுதாரிப்பதற்குள், விஜய் அங்கிருந்து தப்பித்துவிட்டதாகக் கூறப்பட்டது.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், தாழம்பூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உயிருக்குப் போராடிய முகேஷை மீட்டு, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கேயிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட முகேஷ், மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற விஜயகுமாரை தீவிரமாகத் தேடிவந்தனர். இதற்கிடையே, பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட மோதலே இந்த கோரச் சம்பவத்துக்குக் காரணமாகக் கூறப்பட்டது.

இதனிடையே, தனது வழக்கறிஞருடன் இன்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார் விஜயகுமார். இதைத் தொடர்ந்து, நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது விஜயகுமார், தனக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதைத் தெரிவித்தார்.

``சில மாதங்களுக்கு முன்னர், குப்பைக் கிடங்கு ஒன்றில் துப்பாக்கியைப் பார்த்தேன். உடனடியாக அதை எடுத்து, யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டின் அருகே புதைத்துவைத்தேன். பின்னர், தீபாவளி சமயத்தில் அதைத் தோண்டி எடுத்து கையில் வைத்திருந்தேன். வீட்டுக்கு முகேஷ் வந்தபோது, அதை அவனிடம் காண்பித்தேன். அப்போது, தவறுதலாக அவன் கைபட்டு துப்பாக்கி வெடித்தது. அது, முகேஷின் தலையைத் தாக்கியது.

உடனடியாக என்ன செய்வது எனத் தெரியாமல் அங்கிருந்து துப்பாக்கியுடன் தப்பிவிட்டேன். பின்னர், கோவளம் கடற்கரை பகுதிக்குச் சென்று துப்பாக்கியை கடலில் வீசிவிட்டேன்” என்றார். நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, விஜயகுமாரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...