இந்த புல் புல் புயல் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? - அச்சத்தில் மக்கள்!

நவம்பர் 07, 2019 423

சென்னை (07 நவ 2019): வங்கக் கடலில் உருவாகியுள்ள புல் புல் புயல் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் வங்கக் கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இதற்கு ‘புல்புல்’ புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிவேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புல்புல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அடுத்த 36 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும். இது தற்போது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் பரவலானது வரை மழை பெய்யக்கூடும். ஒடிசாவில் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்யும்.

இந்த புயல் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘மஹா’ புயல் படிப்படியாக வலு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...