புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அரசு மருத்துவமனையில் தொடக்கம்!

நவம்பர் 07, 2019 341

மதுரை (07 நவ 2019): புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடித்து சிகிச்சை பெற ஏதுவாக பெட் ஸ்கேன் மதுரை அரசு மருத்துவமனையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

தென் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ 10 கோடி செலவில் பெட் ஸ்கேன் (PET Scan - positron emission tomography) மதுரை அரசு மருத்துவமனையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

புற்றுநோய், இருதயப் பிரச்சனைகள், நரம்பு தொடர்பான பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் கண்டறிய PET ஸ்கேன் பெரிதும் உதவுகிறது. 

அமெரிக்காவில் சுமார் 20 லட்சம் பேர் ஆண்டுதோறும் பெட் ஸ்கேன் சோதனைகளை மேற்கொள்கின்றனர். பொதுவாக இந்த பரிசோதனைகள் புற்றுநோய், இருதய நோய், மூளை பிறழ்வுகள், மத்திய நரம்பு மண்டல பிரச்சினைகளை கண்டறிய பயன்படுகின்றன.

ரேடியோ ஆக்டிவ் டிரேசர்ஸ் எனப்படும் கதிரியக்க உளவியை ரத்த நாளத்தில் ஊசி மூலமாகவோ, மாத்திரையாக உட்கொண்டோ, உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. சில உடல் உறுப்புகளும், தசை திசுக்களும் இதனை உள்வாங்கிக் கொள்வதையடுத்து அவற்றின் செயல்பாடு குறித்து மருத்துவர் முடிவுக்கு வர இயலும். ரத்த ஓட்டம், பிராண வாயு, ரத்த அளவு போன்ற பல்வேறு சோதனைகளை இதன் மூலம் மேற்கொள்ள இயலும்.

இந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. புறநோயாளிகளுக்கும் செய்யப்படும் இந்த பரிசோதனைகளில் ஆபத்து மிகக் குறைந்த அளவுதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும் பெட் ஸ்கான் சோதனையை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு சில முன்னெச்சரிக்கை சோதனைகள் நடத்தப்படலாம். 30 முதல் 45 நிமிடங்களில் பெட் ஸ்கான் பரிசோதனை நடைபெறுகிறது.

உடலில் செலுத்தப்படும் கதிரியக்க பாதிப்புகள் 12 மணி நேரம் நீடிக்கும் என்பதால் யாருடனும் நெருக்கமாக இருத்தல் கூடாது. உடலில் தங்கிய டிரேசர்களை வெளியேற்ற நிறைய நீர் அருந்த வேண்டும். இரண்டு நாட்களுக்குள் அனைத்து கதிரியக்க உளவிகள் உடலை விட்டு வெளியேறி விடுகின்றன. அதற்குள் பரிசோதனையின் முடிவுகளையும் மருத்துவர் அளித்துவிடுவார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...