இனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாது: தா.பாண்டியன்!

நவம்பர் 10, 2019 383

தேனி (10 நவ 2019): இனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறினார்.

தேனியில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் விவாதப் பொருளாக இருந்து வந்த அயோத்தி வழக்கின் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளதால், இதை அனைவரும் அதே ஒருமித்த கருத்துடன் தீர்ப்பை ஏற்க வேண்டும். இந்த தீர்ப்பை மதிப்பதுடன், எந்தவொரு விமர்சனமும் செய்யக் கூடாது. இம்மண்ணில் பிறந்த அனைவரும் இந்தியர்களே என்பதை ஏற்க வேண்டும். மதத் தலைவர்கள் மத நல்லிணக்கம் காக்க அறைகூவல் விடுக்க வேண்டும். இனி நாட்டில் மதத்தின் பெயரால், தெய்வத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாது என்பதற்கு முதல்படியாக இந்த தீர்ப்பை பயன்படுத்த வேண்டும். மீண்டும் கலவரத்திற்கு வித்திடுபவர்களை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்." என்றார் அவர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...