கள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியுமா?

நவம்பர் 10, 2019 425

தூத்துக்குடி (10 நவ 2019): தூத்துக்குடியில் இரண்டாவது கணவனுடன் தனி வீட்டில் வசித்து வந்த பெண், தன்னை காதலித்த 3-வது நபருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் 40 வயதான ராஜபாண்டி. இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள், 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது ஏராளமான கார் கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்நிலையில் 3-வதாக இவர் கார் திருடுவதற்கு துப்புக் கொடுக்கும் பெண் ஒருவருடன் ரகசியமாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக ராஜபாண்டியை காணவில்லை என்று கூறப்பட்டுவந்த நிலையில், தட்டப்பாறை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆடையில்லாமல் ஆண்சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

அது ராஜபாண்டியின் சடலமாக இருக்கும் என்று சந்தேகித்த நிலையில், கார் திருட துப்புக்கொடுக்கும் பெண்ணை பிடித்து விசாரித்த போது தனது மகனின் காதலி சித்ராவுடன் புதியம்புத்தூரில் குடித்தனம் நடத்திவருவதாக தெரிவித்தார். அங்கு சென்று சித்ராவை பிடித்து விசாரித்தபோது ராஜபாண்டி மாயமானதற்கான மர்மம் விலகியது.

ராஜபாண்டிக்கு கார் திருட துப்புக் கொடுக்கும் பெண்ணின் மகன், தான் வேலை பார்த்து வரும் எஸ்டேட்டில் இருந்து சித்ரா என்ற பெண்ணை காதலித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான்.

அவன் மீண்டும் எஸ்டேட்டுக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் சித்ரா தனது மாமியாருடன் வீட்டில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட கார் கொள்ளையன் ராஜபாண்டி அந்த பெண்ணை 4-வதாக தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். கார் கொள்ளையில் கிடைக்கின்ற பணத்தை மாமியாருக்கும்,சித்ராவுக்கும் வாரி வழங்கி உள்ளான்.

மகன் காதலித்து வீட்டுக்கு அழைத்து வந்த பெண்ணை பணத்துக்கு ஆசைப்பட்டு ராஜபாண்டியுடன் அனுப்பிவைத்துள்ளார் சித்ராவின் மாமியார். சித்ராவை அழைத்துக் கொண்டு சென்ற ராஜபாண்டி புதியம்புத்தூரில் தனி வீடு பார்த்து குடிவைத்துள்ளான்.

இந்த நிலையில் அந்த வீட்டிற்கு ராஜபாண்டியை சந்திக்க, காரை திருடி விற்க உதவியாக இருக்கும் ராமர் மற்றும் சக்திவேல் வந்துள்ளனர். இதில் சக்திவேல் 22 வயதான இளைஞன் என்பதால் அவனை தனது காதல் வலையில் வீழ்த்திய சித்ரா அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டுள்ளாள்.

இந்த விவரம் தெரிந்து ராஜபாண்டி, குடிபோதையில் வந்து சித்ராவை கடுமையாக அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளான். இது குறித்து தனது புதிய காதலன் சக்திவேலிடம் "ராஜபாண்டி உயிரோடு இருக்கும் வரை நாம் ஒன்றாக முடியாது" என்று கூறி சித்ரா கண்ணீர் விட்டதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று சித்ரா,ராமர், சக்திவேல் ஆகிய 3 பேரும் ஒன்றாக வீட்டில் இருப்பதை கண்ட ராஜபாண்டி தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ராஜபாண்டி அரிவாளுடன், சக்திவேலை வெட்டுவதற்கு பாய்ந்த போது ராமர் குறுக்கே விழுந்து தடுத்ததால் அவருக்கு காலில் வெட்டு விழுந்துள்ளது.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த சித்ரா, சக்திவேல் ஆகியோர் சேர்ந்து ராஜபாண்டியை மடக்கி பிடித்து கையில் இருந்த அரிவாளைப் பறித்து ராஜபாண்டியின் தலையை துண்டாக அறுத்ததாக கூறப்படுகின்றது.

அதன் பின் தலையை பிளாஸ்டிக் பையில் சுற்றி, பக்கத்தில் உள்ள கிணற்றில் வீசியதாகவும் தலையில்லா உடலை காரில் தூக்கிச்சென்று, தட்டப்பாறை கல்குவாரி குட்டையில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சித்ரா கொடுத்த தகவலின் பேரில் காலில் வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமரை பிடித்தனர்.

இருவரிடமும் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் ராஜபாண்டியின் உடலையும், தலையையும் மீட்டு பிணக்கூறாய்வுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சக்திவேலை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...