அண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெரியுமா?

நவம்பர் 11, 2019 355

சென்னை (11 நவ 2019): தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அதிகாரங்கள் மூலம் கருணாநிதியையே ஸ்டாலின் விஞ்சிவிட்டார் என்று கூறப்படுகிறது.

திமுகவைப் பொருத்தவரை தலைவர் பதவியைவிட, பொதுச்செயலாளர் பதவியே அதிகாரம் மிக்கதும், உண்மையானதும் ஆகும். ஏனெனில், தலைவர் பதவி என்ற ஒன்று திமுகவை அண்ணா தொடங்கியபோது ஏற்படுத்தப்படவில்லை.

பெரியாரிடம் இருந்து பிரிந்து திமுகவை உருவாக்கினார் அண்ணா, கட்சியின் கொள்கைகளை விளக்கி 1949 செப்டம்பர் 18-இல் ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் பேசிய அண்ணா "நான் அறிந்த தலைவர், தெரிந்த தலைவர், பார்த்த தலைவர் பெரியார் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்தது இல்லை. அதே காரணத்தால்தான் திமுகவுக்குத் தலைவரை ஏற்படுத்தவில்லை. அவர் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியைக் காலியாகவே வைத்திருக்கிறோம். அந்தப் பீடத்தில், நாற்காலியில் வேறு ஆட்களை அமர்த்தவோ அல்லது நானோ அமர விரும்பவில்லை' என்று ஆணித்தரமாகப் பேசினார்.

ஆனால், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அந்தப் பதவியில் 50 ஆண்டுகள் கருணாநிதி இருந்தார்.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக உள்கட்சித் தேர்தல் வந்தது. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற மறுத்த நெடுஞ்செழியன், கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முனைந்தார்.

திமுகவின் உள்கட்சி தேர்தல் மூலம் தலைவராக கருணாநிதியும், பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும், பொருளாளராக எம்ஜிஆரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனினும் திமுகவில் பொதுச் செயலாளர் பதவி ஏதோ ரப்பர் ஸ்டாம்ப் பதவி போலத்தான் இன்றுவரை இருந்து வருகிறது.

பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலமின்மையால் கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். அதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பணியை வேறொருவரிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி எதுவும் இல்லை என்றாலும் துரைமுருகனை பொதுச் செயலாளராக்கிவிட்டு பொருளாளர் பதவியை வேறொருவருக்கு கொடுக்கலாம் என்றால் அதில்தான் சிக்கல்.

பொருளாளர் பதவியை அடைவதற்கு டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசா என பெரும்படையே வரிசையில் நிற்கிறது. இதில் ஒருவருக்கு பொருளாளர் பதவியைக் கொடுத்தால், அது உள்ளாட்சித் தேர்தலிலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் உள்கட்சி மோதலால் பாதிப்பு ஏற்படும் என்று மு.க.ஸ்டாலின் கருதுகிறார்.

இதனால், பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தையும் தம் வசமே வைத்துக் கொள்ள முடிவெடுத்தார். அதன்படி, ராயப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஸ்டாலின் வசம் பொதுச்செயலாளருக்கான அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு ஆபத்து வந்ததால், கருணாநிதி தலைவர் பதவியை உருவாக்கி, அந்தப் பதவியில் அமர்ந்து, பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரத்தையும் மறைமுகமாக அவர் கையில் வைத்திருந்தார்.

இப்போது மு.க.ஸ்டாலின் நேரடியாகவே தலைவர் பதவியையும், பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தையும் அடைந்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...