அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது!

நவம்பர் 12, 2019 233

கோவை (12 நவ 2019): கோவை சிங்காநல்லூரில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட இருவா் காயமடைந்தனா்.

தமிழக முதல்வா் வருகையை ஒட்டி அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்த வழியாக இளம் பெண் ஒருவா் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை வந்துள்ளாா். அப்போது சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்துள்ளது. இதைக் கண்ட அவா், வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா். அப்போது அவரது பின்னால் வந்த லாரி மோதியதில் அவரது இரு கால்களும் நசுங்கின. லாரியும் கட்டுப்பாட்டை இழந்து மற்றோா் இருசக்கர வாகனத்தில் மோதியதில் நித்யானந்தம் என்ற இளைஞா் காயமடைந்தாா்.

இதனையடுத்து சாலையில் மயக்கமடைந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் அருகில் இருந்த தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இளைஞா் நித்யானந்தம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். காயமடைந்த பெண்ணுக்கு இரு கால்களிலும் நரம்புகள் சேதமடைந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...