பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்!

நவம்பர் 12, 2019 407

சென்னை (12 நவ 2019): பாபர் மசூதி நிலம் தொடர்பான அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் முஸ்லிம்கள் புண்ணுக்கு மேலும் காயம் ஏற்படுத்தியுள்ளன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக நடந்துவந்த, பாபர் மசூதி ராம் ஜென்ம பூமி வழக்கில் நிலம் இந்துக்களுக்கே சொந்தம்' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் கடந்த சனிக்கிழமையன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் , நாம்தமிழர் சீமான் தவிர பலர் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

ஸ்டாலினின் அறிக்கை குறித்து, பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன் ''அயோத்தி தீர்ப்பு தொடர்பான ஸ்டாலின் அறிக்கையை முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காமல் வெளியிடப்பட்ட அறிக்கையாகவே பார்க்கவேண்டியுள்ளது. பள்ளிவாசல் கட்டிக்கொள்ள அனுமதி கேட்டோ அல்லது அதற்கு நிலம் கேட்டோ உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் தரப்பினர் மேல்முறையீடு செய்யவில்லை. மாறாக எந்த இடம் சர்ச்சைக்குரிய இடமாக இருக்கிறதோ அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமான நிலம் என்று கூறியே மேல்முறையீடு செய்தனர். இப்படி இருக்கும்போது முஸ்லிம்களின் வாக்குகளை நம்பி இருக்கக்கூடிய தி.மு.க, முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறைந்தபட்சம் தீர்ப்பில் உள்ள சில பிழைகளையாவது தி.மு.க குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி தவிர்த்து மற்ற முக்கியமான எந்தக் கட்சியும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து அறிக்கை வெளியிடவில்லை. இந்தத் தீர்ப்பை வரவேற்பதன் மூலமாக தி.மு.க இந்துக்களின் வாக்குகளைப் பெற முயற்சி செய்வதாகத் தெரிகிறது.

தி.மு.க மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியும் இந்தத் தீர்ப்பை வரவேற்று இருக்கிறது. கேரளாவில் சபரிமலை விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட்டது. இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு இங்கே தி.மு.க முயற்சி செய்வது போல கேரளாவில் காங்கிரஸ் முயற்சி செய்தது. சபரிமலை தீர்ப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பா.ஜ.கவுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவிலான பங்கு காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது.

1992 டிசம்பர் 6 -ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. ஆனால், பாபர் மசூதி இடிப்பைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அதைச் செய்யவில்லை.

இந்த விஷயத்தில் பிரச்னையைப் பெரிதாக்க தி.மு.க விரும்பாமல்தான் தீர்ப்பை ஏற்றிருக்கிறது என்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுதான் ஆகவேண்டும். ஆனால் ஏற்பது வேறு; அதை முழுவதுமாக அங்கீகரிப்பது வேறு. நீதிமன்றத் தீர்ப்பில் உள்நோக்கம் கற்பிப்பதுதான் தவறே ஒழிய, தீர்ப்பில் இருக்கக்கூடிய பிழைகளைச் சுட்டிக்காட்டுவது தவறில்லை. அவர் வெளியிட்ட அறிக்கையில் குறைந்த பட்சம் அந்தத் தீர்ப்பின் குறைகளையாவது சுட்டிக் காட்டியிருக்கலாம். அதை ஸ்டாலின் செய்யாமல் தவிர்த்ததை இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியாகவே பார்க்க முடிகிறது'' என்றார்.

ஏற்கனவே முத்தலாக் தடை சட்ட மசோதா அமுல் படுத்தப்பட்டதிலும் திமுக பாஜகவை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...