ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்!

நவம்பர் 12, 2019 519

சென்னை (12 நவ 2019): நடந்து முடிந்த திமுக பொதுக்குழு கட்சிக்குள் ஸ்டாலினுக்கு எதிராகபல்வேறு எதிர்ப்பாளர்களை உருவாக்கியுள்ளது.

நவம்பர் 10-ம் தேதி காலை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சுமார் 4000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் மீது சரமாரியாகக் குற்றசாட்டை அள்ளித் தெளித்தனர். இதனால் கடுப்பான ஸ்டாலின் இறுதியாகப் பேசும் போது கட்சி நலனுக்காக நான் சர்வாதிகாரியாகவும் செயல்படத் தயங்கமாட்டேன் என்றார். இதுதான் ஸ்டாலினுக்கு பேராபத்தாக முடிந்துள்ளது.

கூட்டத்தில் கோவையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பேசும்போது ``கோவை மாவட்டத்தில் கட்சி வீக்காக இருக்கிறது என்கிறீர்கள். ஆனால், அங்குள்ள கோஷ்டியைக் கட்சி கண்டுகொள்வதில்லை. பத்துக்கும் மேற்பட்ட கோஷ்டிகள் கோவை மாவட்டத்தில் இருக்கிறது. எந்த கோஷ்டியிலிருந்து செயல்படுவது, பதவியை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்றே புரியவில்லை” என்று புலம்பினார்.

மறுபுறம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண்நிர்வாகி ஒருவர் ``எங்கள் மாவட்டத்தின் செயலாளரை பார்க்கவே முடியவில்லை. மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிக்குக் கூட முறையான அழைப்பு இல்லை. புதிய பெண்கள் கட்சிக்குள் சேர்ந்தால் அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. எங்களைப் போன்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என்று புலம்பினார்.

மற்றொரு பெண் நிர்வாகி “மகளிர் இடஒதுக்கீட்டை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், கட்சிக்குள் அந்த நடைமுறையை முழுமையாகக் கொண்டுவரவேண்டும். மகளிருக்கு இன்னும் கட்சிக்குள் முக்கியத்துவம் இல்லை” என்றார்.

மற்றொரு நிர்வாகி ஸ்டாலின் மீதே குற்றச்சாட்டை வைத்தார். “நீங்கள் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வது போல இந்துக்களின் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்” என்றார்.

சிவகங்கை மாவட்ட நிர்வாகி ஒருவர் ``எங்கள் மாவட்டச் செயலாளர் யாரையும் மதிப்பது இல்லை. அவர் இஷ்டத்திற்குச் செயல்படுகிறார். அவருக்கென கோஷ்டியை உருவாக்கி வைத்துள்ளார்”என்று குற்றம்சாட்டினார்.

அன்று மாலை அறிவாலயத்திற்கு முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்டச் செயலாளருமான சுரேஷ்ராஜனை அழைத்துள்ளார் ஸ்டாலின். அவரிடம் ``காலையில் ஒன்றியச் செயலாளர் ரவி பேசியபிறகு சில விஷயங்களை நான் விசாரித்தேன். உங்கள் தூண்டுதலில்தான் ரவி அப்படிப் பேசியிருக்கிறார். ரவி கேரளாவில் என்ன தொழில் செய்கிறார், அவர் மீது உள்ள சர்ச்சைகள் எல்லாம் எனக்குத் தெரியும். அடுத்த மாவட்டத்திற்குள் புகுந்து கலகம் செய்வதை இனி நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று ஸ்டாலின் கடுகடுத்துப் பேசியதில், அப்செட்டாகிவிட்டார் சுரேஷ்ராஜன். பொதுக்குழுவின் பேச்சு மனோ தங்கராஜுக்கு வினையாகும் என்று நினைத்த சுரேஷ்ராஜனுக்கு இது சிக்கலாகிவிட்டது.

மனோ தங்கராஜ் மீது கூடங்குளம் போராட்ட வழக்கு மற்றும் பி.ஜே.பி-க்கு எதிரான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால் ரவியின் குற்றச்சாட்டு வேறுவிதமாக இருந்துள்ளது. ரவியைப் பற்றி மனோ தங்கராஜ் ஏற்கெனவே ஸ்டாலினிடம் சில புகார்களை கொண்டுசென்றிருக்கிறார். மதுரை மன்னனுக்கு நெருக்கமானவர் ரவி என்கிற விவரமும் ஸ்டாலின் காதில் போடப்பட்டுள்ளது.

ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு தனக்கு நெருக்கமானவர்களிடம் சுரேஷ்ராஜன், பொதுக்குழு விவகாரம் குறித்து தன்னிடம் தலைவர் கடிந்துகொண்ட விஷயத்தை வருத்தத்தோடு சொல்லியுள்ளார். மறுதினம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் மனோ தங்கராஜை சந்தித்த சீனியர் தலைவர் ஒருவர் “பொதுக்குழுவில் நடந்த விஷயங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். தலைவருக்கு எல்லாம் தெரியும்” என்று சொல்லி அமைதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் தி.மு.க இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கும் நிலையில் இந்தப் பொதுக்குழு சர்ச்சை அந்த மாவட்டத்தில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்திவிடுமோ என்று வருத்தப்படுகிறார்கள் மாவட்ட நிர்வாகிகள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க பாபர் மசூதி தொடர்பான வழக்கின் தீர்ப்பில் ஸ்டாலின் தீர்ப்பை வரவேற்றுள்ளது திமுகவின் முஸ்லிம் உறுப்பினர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...