இவரெல்லாம் தமிழகத்தில்தான் வாழ்கிறாரா? - பால் முகவர்கள் சங்கம் கேள்வி!

நவம்பர் 14, 2019 290

சென்னை (14 நவ 2019): திமுக மீது குற்றம் சாட்டும் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் திரு. நிர்மல்குமார் தமிழகத்தில்தான் வாழ்கிறாரா? என்று தமிழ் நாடு பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுபியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 60ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளுவரின் உண்மை வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கும், இந்துக்களுக்கும் திமுக பெரும் துரோகம் இழைத்து விட்டது. அத்துடன் தமிழையும், திருக்குறளையும் தங்களின் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினார்களே தவிர மக்களிடம் கொண்டு போய் சேர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை என திமுக மீது குற்றம் சாட்டியுள்ள பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் திரு. நிர்மல்குமார் அவர்கள் உண்மையில் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் வாழ்கிறாரா...? அல்லது வின்வெளியில் வாழ்ந்து வருகிறாரா...? என தெரியவில்லை.

ஏனெனில் கடந்த 60ஆண்டுகளாக அதாவது திமுக தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் கண்டு வெற்றி வாகை சூடியது 1967ல் அறிஞர் அண்ணா தலைமையில் தான். அதன் பிறகு தற்போது வரை அதாவது 1967முதல் 1976வரையிலும், அதன் பிறகு 1989-1991, 1996-2001, 2006-2011 என தமிழகத்தில் திமுக ஆட்சி செய்தது சுமார் 23ஆண்டுகள் மட்டும் தான்.

ஆனால் கடந்த 1977முதல் 1988வரையிலும், அதன் பிறகு 1991-1996, 2001-2006, 2011முதல் 2019தற்போது வரை என சுமார் 28ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி செய்தது, ஆட்சி செய்து கொண்டிருப்பது அதிமுக தான்.

(மேற்கண்ட காலங்களின் இடையே குடியரசு தலைவர் ஆட்சி நடந்தது தனிக்கதை)

எனவே நீங்கள் குற்றம் சுமத்துவதாக இருந்தால் ஒன்று இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒன்றாக சேர்த்து குற்றம் சுமத்தியிருக்க வேண்டும். அல்லது அதிக ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி என்கிற அடிப்படையில் அதிமுகவை குற்றம் சுமத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அதை விடுத்து இத்தனை காலம் எங்கிருந்தோம் என்பது கூட தெரியாமல் தற்போது திருக்குறளையும், திருவள்ளுவரையும் காப்பாற்ற வந்த பாதுகாவலன் போல திமுக மீது விழுந்து பிராண்டி, அதிமுக மீது கரிசனம் காட்டியிருப்பதைக் காண்கையில் "பாஜகவின் B டீம் அதிமுக" என்பதை "எங்கப்பன் குதிருக்குள்ளே" என உலக மக்களுக்கு நீங்களே உறுதிபடுத்தியுள்ளீர்கள்.

மேலும் "திருக்குறளை மக்களிடம் எளிமையாக கொண்டு போய் சேர்க்க ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுங்கள்" என தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு கோரிக்கை வைப்பதை விட ஆவின் நிறுவனத்தில் நடக்கும் பல கோடி ரூபாய் ஊழல்களை, முறைகேடுகளை களைந்து தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவினை காப்பாற்ற கோரிக்கை முன் வையுங்கள். ஆவின் நிறுவனம் ஊழல் முறைகேடுகளில் இருந்து காப்பாற்றப்பட்டால் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

அதை விடுத்து நீங்க (பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் திரு. நிர்மல்குமார் அவர்கள்) டுவிட்டரில் பதிவிடறதும், அதுக்கு திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் கண்டிப்பாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் னு ஒத்து ஊதறதும்... உங்க ரெண்டு பேரோட டுவிட்டர பார்க்கும் போது "தில்லானா மோகனாம்பாள் மாதிரியே ஆஹா... ஆஹா..."

உங்களுடைய செயல் பார்க்க வேண்டுமானால் அழகாக இருக்கும். ஆனால் "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஐயன் திருவள்ளுவருக்கு எந்த நிறத்தை பூச நினைத்தாலும் அதைப் பார்த்து தமிழர்கள் ஏமாறப்போவதில்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...