எஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!

நவம்பர் 15, 2019 316

ராமநாதபுரம் (15 நவ 2019): எஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த காட்டு பாவா ராவுத்தரின் மகன் செய்யது முகம்மது. எஸ்.பி.பட்டினம் காவல் நிலையம் அருகே மெக்கானிக் ஷாப் நடத்திவருபவர் அருள்தாஸ். 2014-ம் ஆண்டு அக்டோபர் 14-ல் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இது தொடர்பாக அருள்தாஸ் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். போலீஸார் வாலிபர் செய்யது முகமதுவை ஸ்டேஷனுக்குக் கூட்டி சென்றனர்.

அங்கு செய்யது முகமதுக்கும், காளிதாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அங்கு டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து எஸ்.ஐ காளிதாஸை செய்யது முஹம்மது குத்த முயன்றதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அப்போது தன்னை காத்துக்கொள்ள எஸ்.ஐ காளிதாஸ் தனது கைத் துப்பாக்கியை எடுத்து செய்யது முகமதுவை நோக்கி சுட்டுள்ளார். இதில் செய்யது முகம்மதுவின் கழுத்து மற்றும் மார்பில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ காளிதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பணியில் சேர்ந்தார். தற்போது அவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ராமநாதபுரம் செஷசன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதன்படி எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் வாலிபர் செய்யது முகமதுவை சுட்டுக் கொன்ற எஸ்.ஐ காளிதாஸுக்கு ஆயுள் தண்டனையும் 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து ஷெசன்ஸ் நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...