போனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடரும் மர்மம்!

நவம்பர் 15, 2019 441

செங்கல்பட்டு (15 நவ 2019): செங்கல் பட்டு கல்லூரியில் மாடியிலிருந்து விழுந்து இறந்த மாணவி மரணத்தில் மர்மம் தொடர்கிறது.

செங்கல்பட்டு, வேதநாராயணபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று. இந்தக் கல்லூரியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் படித்துவருகிறார்கள். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்துவருகின்றனர். இந்தக் கல்லூரியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கிருஷ்ணபிரியா மூன்றாம் ஆண்டு கணிதவியல் பிரிவில் படித்துவந்தார்.

கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்ததால் தினமும் பேருந்திலேயே கல்லூரிக்குச் சென்றுவருவார். கடந்த 13-ம் தேதி மாலை கல்லூரி வகுப்புகள் முடிந்த நிலையில் வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே இருந்துள்ளார். மாலை சுமார் 5.30 மணியளவில் இரண்டாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் விழுந்துள்ளார். சகமாணவிகள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு அங்கு முதலுதவியைச் செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து கல்லூரிக்கு செங்கல்பட்டு காவல்துறையினர் விரைந்தனர். ஆனால், அங்கிருந்த காவலாளிகள் அவர்களை கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்தினரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றனர். கல்லூரி நிர்வாகத்தினர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்ததால் காவல்துறையினர் கொதிப்படைந்தனர். இரவு முழுவதும் முயன்றும் மாணவியின் பெயர் மற்றும் விவரங்களை காவல்துறையினரால் பெறமுடியவில்லை.

மீண்டும் காலையில் காவல்துறை அதிகாரிகள், கல்லூரி நிர்வாகத்தினரை தொடர்புகொண்டு சத்தம் போட்டுள்ளனர். கல்லூரி மாணவி மாடியிலிருந்து விழுந்த சம்பவத்தைக் காவல்துறைக்கு தெரிவிக்காததும், மாணவி விழுந்தவுடன் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதும், கல்லூரி நிர்வாகிகள் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்ததும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

` மாணவி மரணத்தில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா... அந்தநேரத்தில் 2-வது மாடியில் இருந்தவர்கள் யார்?' என்கின்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...