ஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி!

நவம்பர் 19, 2019 272

சென்னை (19 நவ 2019): ஹனிமூனில் விஷப்பரீட்சையில் இறங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் புது மண மாப்பிள்ளை.

சென்னை அமைந்தகரை திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், அரவிந்த். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக உற்சாகத்துடன் இமாச்சலப் பிரதேசம் மணாலிக்குச் சென்றனர்.

மணாலியின் இயற்கை அழகைச் சுற்றிப்பார்த்த தம்பதிகள், மணாலிக்கு அருகேயுள்ள தோபிக்குச் சென்றுள்ளனர். அங்கு, பிரபலமான ‘பாரா க்ளைடிங்’ விளையாட்டில் ஈடுபட அரவிந்த் டிக்கெட் வாங்கியுள்ளார். பாராசூட்டில் பயிற்சிபெற்ற ஒருவருடன் சுற்றுலாப் பயணி ஒருவரும் இணைந்து பறப்பதுதான் இந்த ‘பாரா க்ளைடிங்’ விளையாட்டு. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், கணவரின் விருப்பத்துக்காக சம்மதித்து ப்ரீத்தியும் உற்சாகத்துடன் கணவர் பறப்பதை வீடியோ பதிவு செய்துள்ளார்.

விமானி ஹரி ராமுடன் பறந்துகொண்டிருந்த அரவிந்த், திடீரென பாராசூட்டில் தடுமாற, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பதற்றமாகியுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சுதாரிப்பதற்குள், பாராசூட்டில் இருந்து கீழே விழுந்த அரவிந்த், சம்பவ இடத்திலேயே பலியானார். ப்ரீத்தி கண் முன்னாலேயே நடந்த இந்த கோரச் சம்பவம், அவரை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டது. அரவிந்த்தின் உடலைப் பெறுவதற்காக, அவரது உறவினர்கள் இமாச்சலப் பிரதேசத்துக்குப் பறந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குலு மாவட்ட எஸ்.பி., பாதுகாப்பு பெல்ட்டை அரவிந்த் சரியாக அணியாததால்தான் விபத்து நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “பாராசூட் விமானி ஹரி ராமும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். 336, 304 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. இதுபோன்ற விபத்துகள் மேலும் நிகழாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தக் கூறியுள்ளோம்” என்றுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...