அதிமுகவுக்கு தெம்பு இருந்தால் நேரடியாக சந்திக்கட்டும் - அதிமுகவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக!

நவம்பர் 20, 2019 295

சென்னை ( 20 நவ 2019): மேயர், நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அதிமுக நடத்தியுள்ள ஆலோசனைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை டிசம்பர் 13-ம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன.

இந்தநிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேயர், நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் முறையில் தேர்தல் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டது என்று செய்திகள் வெளியானது.

இந்த முடிவை கூட்டணி கட்சியான பாஜக கடுமையாக எதிர்த்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ‘மேயர் பதவி நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் மேயர் உள்ளிட்ட பதவிகளைக் கேட்பதைத் தவிர்க்கவே அ.தி.மு.க அரசு இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜனநாயக சீர்கேடை ஆளும் கட்சி தற்போது செய்துள்ளது.

அ.தி.மு.கவுக்கு நேரடித் தேர்தலை எதிர்கொள்வதற்கு தெம்பு இருந்தால் ஏற்கெனவே இருந்தமுறையில் நேரடித் தேர்தல் முறையில் தேர்தலை தமிழ்நாடு அரசு நடத்தவேண்டும்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...